Published : 17 Feb 2023 11:47 AM
Last Updated : 17 Feb 2023 11:47 AM
சென்னை: டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கொசு ஒழிப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா, மஞ்சள் காய்ச்சல், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீடுகள்தோறும் கொசு ஒழிப்பு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
லார்வா புழுக்களையும், கொசுக்களையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளையும், கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடுகளில் கொசு உற்பத்தி பெருகாமல் தடுக்க சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். வீடுதோறும் அக்குழுக்கள் சென்று கண்காணிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குழுக்களின் செயல்பாடுகளை சுகாதார ஆய்வாளர், அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கள ஆய்வுக்குத் தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும்.
வீடுகளைப் போன்ற பொது இடங்களிலும், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் அத்தகைய கொசு தடுப்பு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொசு உற்பத்திக்கு காரணமாக உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மையாக சுற்றுச்சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி வளாகங்களில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.
கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொது மக்களிடையே மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, டயர்கள், நீர் தேங்கும் பயன்பாடற்ற பொருள்களை அகற்றுவது தொடர்பாக குறிப்பிட்ட கால இடைவெளியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT