முதல்வருடன் அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் சந்திப்பு: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

முதல்வருடன் அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் சந்திப்பு: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
Updated on
2 min read

அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை நேற்று சந்தித்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கட்சிப் பொதுச் செயலாளரான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கே.பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு அமைச்சர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, டிடிவி தினகரன் கைது, அதிமுக இணைப்பு முயற்சியில் தோல்வி, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளின் தன்னிச்சையான செயல்பாடுகள் என தொடர் நெருக்கடிகளை முதல்வர் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாச் சலம், செந்தில் பாலாஜி, பி.பழனி யப்பன் ஆகியோர் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரி முதல்வருக்கு நெருக்குதல் அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக நேற்று முன்தினம் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் 10 பேருடன் முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசினர். எம்எல்ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்தபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதிக எண்ணிக்கையில் உள்ள தலித் எம்எல்ஏக்களுக்கு முக்கியத் துவம் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), ஆர்.சந்திரசேகர் (மணப்பாறை), கே.உமாமகேஸ் வரி (விளாத்திகுளம்), ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்) உள்ளிட்ட 10 எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை நேற்று சந்தித்தனர். அப்போது தங்களது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த போது அளிக்கப்பட்ட வாக்குறுதி கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. அமைச்சர்களை எளிதாக சந்திக்க முடிவதில்லை. அப்படியே சந்தித்தாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. இதுகுறித்து முதல்வரிடம் புகார் தெரிவித்தோம். அதிமுக இரு அணிகளும் இணைந்தால்தான் குழப்பங்கள் நீங்கி ஆட்சியை தொடர முடியும். ஆனால், இணைப்பு முயற்சிக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அமைச் சர்கள் சிலர் பேசி வருகின்றனர். இதனால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுபற்றியும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்’’ என்றார்.

முதல்வரை சந்தித்த எம்எல்ஏக் கள், அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும். தங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரியதாகவும் கூறப்படுகிறது. எம்எல்ஏக்களில் பெரும்பாலான வர்கள் அமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை கேட்ப தால் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் அதிமுக அரசின் ஓராண்டு நிறைவு விழாவைக்கூட உற்சாகமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் கருணாஸ் சந்திப்பு

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத் தில் திருவாடணை தொகுதி எம்எல்ஏவான நடிகர் கருணாஸ் நேற்று காலை சந்தித்துப் பேசினார். சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசிய கருணாஸ், தற்போது முதல்வரை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சசிகலா உடனான சந்திப்பு குறித்து முதல்வரிடம் கருணாஸ் விளக்கியதாகவும், சசிகலா தெரிவித்த கருத்துகளை தெரிவித்ததாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in