Published : 15 Feb 2023 08:09 PM
Last Updated : 15 Feb 2023 08:09 PM

ஈரோடு இடைத்தேர்தல் | அதிருப்தி வாக்குகளைப் பிரிக்கும் நாம் தமிழர் - யாருக்கு சாதகம்?

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சீமான்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், அதிமுகவிற்கு முழுமையாகச் செல்லாமல், நாம் தமிழர் கட்சிக்கும் பிரிந்து செல்வதை திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் - அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்ததாக, வாக்காளர்களின் கவனம் பெற்ற வேட்பாளராக மாறி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன். ஒவ்வொரு தேர்தலிலும், பிரதான கட்சிகள் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிர்ணயம் செய்யும் நடைமுறை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த நடைமுறையை மேடைதோறும் சாடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக உள்ள செங்குந்த முதலியார் சமுதாயத்தில் இருந்து, பெண் வேட்பாளரை நிறுத்தி தேர்தல் களத்தை தனக்கு சாதகமாக்க முயற்சி எடுத்துள்ளார்.

கடந்த தேர்தலில் மூன்றாமிடம்: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோமதி, 11 ஆயிரத்து 629 வாக்குகளைப் பெற்றார். வாக்குப்பதிவில் 7.65 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாமிடம் பிடித்தது நாம் தமிழர் கட்சி. தற்போதைய இடைத்தேர்தலில், இந்த வாக்கு சதவீதம் உயருமா, நாம் தமிழர் வேட்பாளர் பிரிக்கும் வாக்குகள் யாருக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆதரவு திரட்டிய சபரீசன்: ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வாய்ப்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி பரவலாக உள்ளது. இந்த அதிருப்தியை போக்கவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஈரோட்டில் முகாமிட்டு, முதலியார் சமுதாய அமைப்புகள், பிரமுகர்களிடம் பேசி ஆதரவு திரட்டினார். அதன் பலனாக சில அமைப்புகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ஆனால், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும்போது, அவருக்கு ஆதரவு தரவேண்டியது நமது கடமை என்ற குரல் அந்த சமுதாய பிரமுகர்களிடம் இன்னமும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

இந்த அதிருப்தியை புரிந்துகொண்டு, அவற்றை வாக்குகளாக மாற்றும் திட்டத்தோடுதான், தனது பிரச்சாரக் கூட்டத்தில், முதலியார் சமுதாயத்தின் பெருமையை தனது வழக்கமான கர்ஜனைக் குரலில் சீமான் பேசினார். இதற்கு கிடைத்துள்ள வரவேற்பு, இதர கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரச்சாரத்திற்கு வரவேற்பு: ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பரிவாரங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட, வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த நாம் தமிழர் படை, வீடு, வீடாய் சென்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாய் வாக்கு சேகரிக்கிறது. சாலை வசதி, குடிநீர் வசதி, மதுக்கடை அகற்றம், போக்குவரத்து பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு என இடத்திற்கு ஏற்றார்போல், பிரச்சினைகளை முன் நிறுத்தி நாம் தமிழர் கட்சி செய்யும் பிரச்சாரம் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது. இரு கட்சியும் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், வாக்கினை எங்களுக்கு செலுத்துங்கள் என்ற வேண்டுகோளும், பிரச்சாரத்தில் வைக்கப்படுகிறது.

கடந்த இரு நாட்களாக பிரச்சார வாகனத்தில் பயணித்து தெருத்தெருவாய் பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான். செல்லுமிடங்களில் எல்லாம், குறை சொல்ல முடியாத அளவுக்கு கூட்டம் கூடி வரவேற்பு அளிக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் வரவேற்பு வாக்காக மாறுமானால், கடந்த தேர்தலை விட இரு மடங்கு வாக்குகளை நாம் தமிழர் வேட்பாளர் பெற வாய்ப்புள்ளது.

அறுவடையாகும் அதிருப்தி வாக்குகள்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் இரண்டு ஆண்டு ஆட்சிக்கான 'எடைத்தேர்தலாகவே' பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை அதிமுகவைக் காட்டிலும், சீமான் வலுவாக எடுத்து வைக்கிறார். உதாரணமாக பேனா நினைவுச்சின்ன விவகாரத்தில், ‘நினைவுச்சின்னம் வைத்தால் உடைப்பேன்’ என சீமான் ஆவேசத்துடன் பேசியது, திமுக எதிர்ப்பு என்ற மனநிலையில் உள்ள வாக்குகளை அவர் பக்கம் சேர்த்துள்ளது.

ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் பிரதான எதிர்கட்சியான அதிமுகவிற்கு மட்டுமே போகாமல், நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு பிரிந்து செல்வது நமக்கு சாதகம் எனக் கருதும் ஆளுங்கட்சி, சீமானின் பிரச்சாரத்தை வரவேற்கவே செய்கிறது. தங்களுக்கு சேர வேண்டிய அதிருப்தி வாக்குகளை நாம் தமிழர் கட்சி பிரிப்பதால் கவலையில் உள்ளது அதிமுக. ஈரோடு கிழக்கில் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்டினால், மக்களவைத் தேர்தலை உத்வேகத்துடன் சந்திக்கலாம் என்ற சீமானின் எண்ணத்தை, வாக்காளர்கள் ஈடேற்றுவார்களா என்பது தேர்தல் முடிவில் தெரியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x