

சென்னை: மின் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளை இணையதளம் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. இதன்படி www.tangedco.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்நிலையில், ஆன்லைன் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் டான்ஜெட்கோ வெளியிட்டுள்ள பதிவில், "அன்பான நுகர்வோர் கவனத்திற்கு, சேவை கேபிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டான்ஜெட்கோவின் ஆன்லைன் சேவைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. சேவைகள் விரைவில் மீட்கப்படும். சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க இன்று (பிப்.15) கடைசி நாள் என்று மின்வாரியம் அறிவித்துள்ள நிலையில் இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.