

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நெய்வேலி லிக்னைட் கார்ப் பரேஷன் மற்றும் தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் இணைந்து அமைத்துள்ள மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமான என்டிபிஎல் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு இரு அலகுகள் மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1000-க்கம் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். அனல் மின் நிலையத்தின் பெரும்பாலான பணிகளை ஒப்பந்தத் தொழிலாளர்களே செய்து வருகின்றனர். நிரந்தரப் பணியாளர்கள் குறைந்த அளவிலேயே பணிபுரிகின்றனர்.
ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்எல்சி அனல் மின் நிலையத்தைப் போல் ஊதியம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு எதிராக என்டிபிஎல் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கை திரு்மபப் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் காலை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர்.
நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறாததால் நேற்று2-வது நாளாக போராட்டம் நீடித்தது. சுமார் 800 பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனல் மின் நிலைய வாயிலில் நடைபெற்ற தர்ணாவில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் என்டிபிஎல் கிளை செயலாளர் அப்பாத்துரை, சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சி முத்து, மாநிலச் செயலாளர் ரசல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநகரச் செயலாளர் ராஜா, உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.சங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தால் மின்சார உற்பத்தி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி மின் உற்பத்தி 560 மெகாவாட்டாக இருந்தது. போராட்டம் நீடித்தால் மின் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே என்டிபிஎல் நிர்வாகம் சார்பில் மாற்றுத் தொழிலாளர்கள் சிலரை நேற்று முன்தினம் இரவில் அனல்மின் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வழிமறித்து திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அனல்மின் நிலையப் பகுதியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.