பிபிசி அலுவலக ஐடி ரெய்டு முதல் அமித் ஷா பேட்டி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.14, 2023

பிபிசி அலுவலக ஐடி ரெய்டு முதல் அமித் ஷா பேட்டி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.14, 2023
Updated on
3 min read

தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023 வெளியீடு: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023–ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை வெகுவாக அதிகரித்திடும் நோக்கத்திலும், விநியோகம், தேவைகள், பயன்பாடுகள் மற்றும் சூழல் அமைப்பை நன்கு வலுப்படுத்திடும் வகையிலும் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 என்ற திருத்திய கொள்கையை முதல்வர் வெளியிட்டார்.

இந்தக் கொள்கை, வெளியிடப்பட்ட தினத்திலிருந்து ஐந்து வருடங்கள் நடைமுறையில் இருக்கும். மின்வாகன உற்பத்தித்துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த தமிழ்நாடு மின் வாகன கொள்கை 2023 யின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைத்திருக்கிறது என் பாணி’: தன்னுடைய பாணி எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைத்துள்ளதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டுவோம் என்றும் ‘உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

‘உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரின் இரண்டாவது பாகம் செவ்வாய்க்கிழமை வெளியானது. அதில் அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவாதத்திற்கோ மத்திய அரசு தயாராக இல்லாமல் இருப்பது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த முதல்வர், "அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பா.ஜ.க அரசின் மீதான நேரடியான குற்றச்சாட்டுகளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வே சீரியஸாக விசாரிக்கிறது. எனவே, இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதேபோல், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட வேண்டும். ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகள் ஆணித்தரமானவை. இதை பற்றி ஒரு வார்த்தை கூட பிரதமர் பதிலளிக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.

சென்னை ஐஐடியில் மாணவர் மரணம்: சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 மாணவர்களில் ஒருவர் மரணம் அடைந்தார். சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி படித்து வருபவர் மாணவர் ஸ்டீபன் சன்னி. இவர் இன்று விடுதி அறையில் தூக்கில் தொங்கியபடி இருந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவர் ஸ்டீபன் உயிரிழந்தார். அதேவேளையில், சென்னை ஐஐடியில் படிக்கும் மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் தனியாரிடம் செல்லும் பொதுக் கழிவறைகள்: சென்னையில் உள்ள பொதுக் கழிவறைகளை தனியாரிடம் கொடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும், கழிவறைகளை 24 மணி நேரம் திறந்து வைக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

வழக்கு நிலுவையில் இருந்தாலும் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம்: ஐகோர்ட்: உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

“அதானி விவகாரத்தில் மறைப்பதற்கும் அஞ்சுவதற்கும் ஏதுமில்லை” : “அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு மறைப்பதற்கும் ஒன்றுமில்லை; அஞ்சுவதற்கும் ஒன்றுமில்லை" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “அதானி குழும விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கைப் பற்றி விமர்சிப்பது சரியாகாது. ஆனால், அதானி குழும விவகாரத்தில் பாஜக அச்சப்படவும் ஏதுமில்லை; மறைக்கவும் ஏதுமில்லை. எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் குழுவை அமைத்தால், அதில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஹிண்டன்பர்க் - அதானி விவகாரத்தை கையாளும் திறன் செபிக்கு உள்ளது’’ என்று கூறினார்.

மேலும் அவர், "வரலாற்றில் யாருடைய பங்களிப்பும் நீக்கப்படக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. சில நகரங்களில் பெயர்கள் மாற்றப்பட்ட முடிவு என்பது நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது. அவை அரசாங்கத்தின் உரிமைக்கு உட்பட்டது" என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைய இந்தியா அழைப்பு: பெங்களூருவில் நடைபெற்ற விண்வெளி கண்காட்சியில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும் என்று நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை: டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருமானவரித் துறை சோதனையை அடுத்து அலுவலக பணியாளர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக பிபிசி இரண்டு பகுதிகளைக் கொண்ட ஆவணப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, அந்த ஆவணப்படம் இந்தியாவில் வெளியாகாமல் தடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், "உள்நாட்டு ஊடகங்களின் மீதான அடக்குமுறை தர்பாரில் உலக ஊடகமும் தப்பவில்லை" என்று டெல்லியில் உள்ள பிபிசி அலுவலவகத்தில் நடந்த ஐடி ரெய்டு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

துருக்கி, சிரியாவுக்கு ரூ.7 கோடிக்கு மருத்துவ உதவி: பூகம்பம் பாதித்த துருக்கி மற்றும் சிரியாவுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நிவாரண உதவிகளுக்காக எல்லையைத் திறக்க சிரியா சம்மதம்: சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளைக் கொண்டு செல்வதில் சுணக்கம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது. மேலும், நிவாரண உதவிகளை பெற முடியாமல் பாதையை தடுப்பதாக பஷார் அல் ஆசாத் அரசு மீது சிரியாவில் உள்ள தன்னார்வ அமைப்புகள் குற்றம் சுமத்தினர். இந்த நிலையில், நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு துருக்கி - சிரிய எல்லையில் இரு பகுதிகளை திறந்துவிடுவதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார். பஷார் அல் ஆசாத்தின் முடிவை ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வரவேற்றுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in