

சென்னை: சென்னையில் உள்ள பொதுக் கழிவறைகளை தனியாரிடம் கொடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும், கழிவறைகளை 24 மணி நேரம் திறந்து வைக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் பொது இடங்களில் கழிவறை வசதியை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மண்டலம் 5, 6 மற்றும் 9 வது மண்டலத்தின் மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்படுத்துதல், திருப்பி அளித்தல் என்ற முறையின் கீழ் கழிவறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து டெண்டர் கோரி இருந்தது.
டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகளை மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 372 இடங்களில் ரூ.430.11 கோடி மதிப்பில் தனியார் பங்களிப்புடன் பொது கழிவறைகள் கட்டப்படவுள்ளது. ஓராண்டு காலத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நவீன கழிவறைகளில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வசதி, டிடிசிவி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு உள்ளிட்டவைகள் இருக்கும்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பொதுக் கழிவறைகளை தனியாரிடம் கொடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் ராயபுரம், திரு.வி.க நகர். தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள 883 பொதுக் கழிவறைகளை தனியார் பராமரிக்கும் பணி மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளது.
ஷிஃப்ட் அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை கொண்டு சுத்தமாகவும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் வகையில் இது செயல்படுத்தப்படும். இதற்கான பராமரிப்பு செலவை மாநகராட்சி வழங்கும். பொதுமக்கள் கழிவறைகளை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கிடைக்கக்கூடிய வரவேற்பின் அடிப்படையில் மற்ற மண்டலங்களிலும் இது விரிவுபடுத்தப்பட உள்ளது.
பழுதடைந்த கழிவறைகள் இடிக்கப்பட்டு அங்கு புதிதாக நவீன முறையில் கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சில கழிவறைகளை சீர்படுத்தி பயன்படுத்தும் பணி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்தக் கழிவறைகளிலும் கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
533 கழிப்பறைகளில் QR code மூலம் கருத்து தெரிவிக்கும் வசதி உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட 528 கழிவறைகளில், 295 கழிவறைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.165 இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. 68 இடங்களில் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது" என்று அவர்கள் கூறினர்.