

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய அரங்கத்திற்குள் நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் செயல்பட வேண்டும் என தமிழக அரசிற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று தேதிகளில் ஏதாவது ஒரு தினத்தில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-2: இஸ்ரோ வடிவமைத்துள்ள எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட், வெள்ளிக்கிழமை காலை 9.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புவி கண்காணிப்புக்கான ‘இஒஎஸ்-07’ உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு, இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை இஸ்ரோ ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது.
கருணாநிதி பேனா குறித்து பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்: தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழகம் தலை நிமிர்ந்தது. கருணாநிதியின் பேனா பல முன்னோடி திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
இதனிடையே, நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "21 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தந்தைக்கு நினைவிடமும், நூலகமும் கட்டியது மட்டுமே முதல்வர் செய்த பணி. தற்போது பேனா சின்னம் வைக்க முயற்சி செய்து கொண்டு உள்ளனர். கடலில் பேனா வைக்கிறார்கள். எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்றுதான். தரையில் வைக்கலாம். இதற்கு மிகுந்த எதிர்ப்பு உள்ளது. நினைவிடத்திற்கு உள்ளே தரையில் பேனா வைக்கலாம்" என்று தெரிவித்தார்.
“ஈரோட்டில் அதிமுகவின் எந்த முகமூடியும் எடுபடாது” - தங்கம் தென்னரசு: "எத்தனை முகமூடிகளைப் போட்டுக்கொண்டு ஈரோடு தேர்தல் களத்துக்கு வந்தாலும் இந்த ஈரோட்டு பூகம்பத்தில் அதிமுக இருக்கக்கூடிய இடம் தெரியாமல் மறையும் என்பது உறுதி" என்று தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ்: மக்களவையில் கடும் விவாதம்: மக்களவையில் வெள்ளிக்கிழமை நடந்த கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக நாடாளுன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, "எத்தனை மருத்துவக் கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன? பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது, “மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவில்லை” என்று திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "மதுரை எய்ம்ஸில் மருத்துவப் படிப்புகள் நடைபெற்று வருகின்றன. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிழையான தகவல்களைக் கூறி அவையைத் தவறாக வழிநடத்துகின்றன” என்று ஆவேசமாக பதில் அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக கடும் விவாதம் எழுந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி: "தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநில அரசுகளை நீக்குவது கிடையாது. எதிர்க்கட்சியில் இருக்கின்ற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடுகின்றனர். ஓர் அரசை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. இவர்கள் விலைக்கு வாங்குகின்றனர்" என்று பிரதமர் மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பதிலடி தந்துள்ளார்.
முன்னதாக, “மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாஜக மீது சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரைகள் மலரும்” என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.
“பிரதமர் மோடியின் பேச்சு ஆணவமானது” - மல்லிகார்ஜுன கார்கே: பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற உரை ஆணவமானது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார். இந்த அரசுக்கு எதிராக நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. வேலைவாய்ப்பின்மை குறித்தோ, பணவீக்கம் குறித்தோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் பேசவில்லை. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது குறித்தும் பிற விவகாரங்கள் குறித்தும் பிரமதர் மோடி பேசவில்லை. அவரால் மட்டும்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என அவர் கூறி இருக்கிறார். இது ஆணவமான பேச்சு” என தெரிவித்தார்.
12 ஆண்டுகளில் 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமை துறப்பு: கடந்த 12 ஆண்டுகளில் 16 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையை துறந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார். அப்போது அவர், ''கடந்த 2011ல் இருந்து இதுவரை 16 லட்சத்து 63 ஆயிரத்து 440 பேர் தங்கள் இந்தியக் குடியுரிமையை துறந்துவிட்டனர். குறைந்தபட்சமாக கடந்த 2020-ல் 85,256 பேரும், அதிகபட்சமாக கடந்த ஆண்டு 2 லட்சத்து 25,620 பேரும் குடியுரிமையை துறந்துவிட்டனர்” என்றார்.
துருக்கி அதிபர் எர்டோகன் மீது மக்கள் அதிருப்தி: பூகம்ப மீட்பு நடவடிக்கைகளில் எர்டோகன் அரசு சிறப்பாக செயல்படவில்லை என துருக்கி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். துருக்கியில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பத்தில் இதுவரை 21,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 20 வருடங்களாக துருக்கியில் ஆட்சியில் இருந்து வரும் எர்டோகன் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வரும் மே மாதம் துருக்கியில் பொதுத் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த இயற்கை பேரிடர், எர்டோகனின் அரசியல் பயணத்தில் பெரும் அடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிபிசி-க்கு தடை கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிபிசி எடுத்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், இந்தியாவில் பிபிசி-க்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.