Published : 10 Feb 2023 10:14 AM
Last Updated : 10 Feb 2023 10:14 AM

3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்: இஸ்ரோ பெருமிதம்

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ வடிவமைத்துள்ள எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட், இஒஎஸ்-07 உட்பட 3 செயற்கைக்கோள்களுடன் இன்று (பிப். 10) காலை 9.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புவி கண்காணிப்புக்கான ‘இஒஎஸ்-07’ உட்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு, இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை இஸ்ரோ ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது.

இந்த திட்டத்தில் முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-7, 156 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது புவி கண்காணிப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வு பணிகளுக்கு பயன்படும். இதனுடன் அமெரிக்காவின் ஜானஸ், ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் ஆசாதிசாட்-2 ஆகிய 2 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன.

— ANI (@ANI) February 10, 2023

இவை அனைத்தும் வெற்றிகரமாக அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை இஸ்ரோ ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது.

சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து எடை குறைந்த செயற்கைக்கோள்களை (500 கிலோ வரை) விண்ணில் செலுத்துவதற்காக சிறியரக எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle-SSLV) ராக்கெட்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புதிதாக வடிவமைத்து வருகிறது. இதன் எடை 120 டன். இதற்கான செலவும் ரூ.30 கோடிக்குள் அடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்எஸ்எல்வி டி2 வெற்றிக்குப் பின்னர் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அளித்தப் பேட்டியில், "இந்த ஆண்டு நிறைய புதிய திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம். குறிப்பாக ககன்யான் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இன்று எஸ்எஸ்எல்வி டி2 வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில் அடுத்ததாக பிஎஸ்எல்வி-C55 ராக்கெட்டை ஏவ ஆயத்தமாகி வருகிறோம். இது மார்ச் இறுதிக்குள் ஏவப்படும்.

மற்றொருபுறம் ரீயூஸபிள் லான்ச் வெஹிகிள் எனப்படும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட் தரையிறங்குவதை சோதனை செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். சித்ரதுர்காவில் உள்ள லேண்டிங் சைட்டில் நிபுணர்கள் முக்கியப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் அந்த இடம் தயாராகி சோதனையும் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல், ஜிஎஸ்எல்வி Mark III ராக்கெட்டை 236 செயற்கைக்கோள்களுடன் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x