Published : 09 Feb 2023 11:22 AM
Last Updated : 09 Feb 2023 11:22 AM

ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா தீர்க்க விரும்பிய 10 பிரச்சினைகள்: முதல்வர், அமைச்சர்களின் கவனத்தை ஈர்க்குமா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டபடி, ஈரோடு கிழக்கு தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்த மனுவை, கூடுதல் ஆட்சியர் மதுபாலனிடம் கடந்த அக்டோபர் மாதம் வழங்கினார் (கோப்புப் படம்)

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து, மறைந்த திருமகன் ஈவேரா, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திருமகன் ஈவெராவின் விருப்பத்தை நிறைவேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடம் எழுந்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து தொகுதி எம்எல்ஏ.க்களும் தங்கள் தொகுதியில் தீர்க்க வேண்டிய முக்கியமான 10 பிரச்சினைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மூலமாக மனு அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா, தொகுதியில் தீர்க்க வேண்டிய 10 பிரச்சினைகள் குறித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், கூடுதல் ஆட்சியர் மதுபாலனிடம் மனு அளித்துள்ளார்.
கடந்த மாதம் 4-ம் தேதி உடல்நலக்குறைவால் திருமகன் ஈவெரா காலமான நிலையில், வரும் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘ஈரோடு மக்களுக்காக என் மகன் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர விரும்பினார். அவர் விரும்பிய திட்டங்களை செயலாக்கத்திற்கு கொண்டு வரவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்’ என பிரச்சாரத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் மறைந்த திருமகன் ஈவெரா, முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 10 முக்கிய பிரச்சனைகளாக மனுவில் குறிப்பிட்டுள்ளவை…

** ஈரோட்டில் பாதாள சாக்கடைத் திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப் பணிகளால் சேதமான சாலைகள், சிமெண்ட் தளங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
** சாயப்பட்டறை தொழிற்சாலை கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரித்து, கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
** ஈரோடு மாநகரில் மழை வெள்ள நீர் தேங்கி, கடைகள், பள்ளிகள், வீடுகளில் புகுவதைத் தடுக்க, நவீன சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
** போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க, ஈரோடு தாலுகா அலுவலகம் அருகே, அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் நவீன வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும்.
**வ.உ.சி.பூங்கா மைதானத்தை புனரமைத்து, விளையாட்டு மைதானம், நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்க வேண்டும்.
** ஈரோடு மாநகராட்சி எல்லையில், 3000 குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அரசு ஆவணங்கள் இருந்தும், பட்டா இல்லாமல் உள்ளது. அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
** மாநகராட்சி முதலாவது மண்டலம் அக்ரஹாரம் பகுதியில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
** மாநகரில் புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும்.
**ஈரோடு - மேட்டூர் சாலை முதல் பேருந்து நிலையம் வரை மேம்பாலம் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.
** திடக்கழிவு மேலாண்மை பணியை மேம்படுத்த, முதலாவது மண்டலத்தில் அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், இரண்டாவது மண்டலத்தில் குமலன் குட்டை, கோட்டை, மூன்றாவது மண்டலத்தில் பெரியார் நகர், நான்காம் மண்டலத்தில் கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து எடுத்துச் செல்ல இடம் தேர்வு செய்ய வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நிலவும் இந்த 10 பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே, மறைந்த திருமகன் ஈவேரா விரும்பியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள நிலையில், திருமகன் ஈவேராவின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதிலும் முனைப்பு காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x