

சேலம்: அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சர்ச்சையின்றி நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதானி குழும விவகாரத்தை நாடாளுமன்ற உயர்மட்ட குழு விசாரிப்பதற்கு மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது. நூறு நாள் வேலை உறுதி திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி என குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கும் பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லின் ஈரப்பதம் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஈரப்பதம் 33 சதவீதத்துக்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் அளிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
ஈரப்பத விதிகளை மத்திய அரசு தளர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. வேட்பாளரை அறிவித்து, வேட்பு மனு தாக்கல் செய்வதற்குள் அதிமுக திணறிவிட்டது.
பாஜக-வை தோளில் சுமந்து திரிவதால் அதிமுக-வை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சர்ச்சையின்றி நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும், என்றார்.