கும்பகோணம் | நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்
Updated on
1 min read

கும்பகோணம்: பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நெற்கதிர்களைக் கையில் ஏந்தியும், நெல்மணிகளைக் கொட்டியும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜன் இந்த ஆர்பட்டத்துக்கு தலைமை வகித்தார். மேலும், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர். தில்லைவனம் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆர்பாட்டத்தில் விவசாய சங்கத்தினர் தரப்பு கூறும்போது, “அறுவடை தொடங்கியுள்ள நிலையில் பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா தாளடி நெல் பயிருக்கு முழுக் காப்பீடு மற்றும் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட தானிய பயிர்களுக்குப் பாதிப்பிற்குரிய அளவிற்கு நிவாரணமும் அரசு அளிக்க வேண்டும்.

மழையால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள 22% ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி, பாதிப்புக்குள்ளான நெற்கதிர்களைக் கையில் ஏந்தியும், நெல்மணிகளை கொட்டியும் விவசாய சங்கத்தினர் கண்டன முழக்கமிட்டனர்.

இந்த ஆர்பட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஏ.எம். ராமலிங்கம், ஏ. ராஜேந்திரன்,எம். வெங்கடேசன், ஆர்.எஸ்.பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in