Published : 07 Feb 2023 07:10 PM
Last Updated : 07 Feb 2023 07:10 PM

திமுகவின் ‘ஈரோடு ஃபார்முலா’, அதிமுகவின் ‘ஸ்கேன் ரிப்போர்ட்’... - இடைத்தேர்தலில் சூடுபிடித்த பிரச்சாரம்

வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் காங்கிரஸ் கட்சியினர்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பரிவாரங்களுடன் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, 12 அமைச்சர்கள் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு இருந்தாலும், குறிப்பிட்ட சில அமைச்சர்களைத் தவிர, மொத்த அமைச்சரவையே ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறது.

அடக்கி வாசிக்கும் ஈவிகேஎஸ்: உள்ளூர் அமைச்சரான சு.முத்துசாமி தனது பரிவாரங்களுடனும், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துடனும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இளங்கோவனுக்கு பதிலாக இவரோடு பிரச்சாரத்தில் ஈடுபடும் சஞ்சய் சம்பத்திற்கும் வாக்காளர்கள் மரியாதை கலந்த வரவேற்பு அளிக்கின்றனர்.

இது தவிர, ஒவ்வொரு வார்டிலும் குறிப்பிட்ட பகுதியில் வாக்காளர்களை வரவழைத்து, அவர்கள் மத்தியில் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தனது மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடர தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பிரச்சாரம் செய்கிறார். திமுக ஆட்சியையும், முதல்வர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசும் இளங்கோவன், தனது வழக்கமான அதிரடி அரசியல் கருத்துகளையெல்லாம் பிரச்சாரத்தில் தவிர்த்து வருகிறார். இவரது ஜீப் பிரச்சாரத்தில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலுவும் இணைந்து கொள்கின்றனர்.

ஆட்களை வளைக்கும் வியூகம்: திமுக தேர்தல் பிரச்சாரக் களத்தில் தொடக்கத்தில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலைப்படுத்தப்பட்டாலும், தற்போது எ.வ.வேலுவைச் சுற்றியே பிரச்சார வியூகம் தொடர்கிறது. குறிப்பாக, பிரச்சாரத்திற்கான அன்றாட செலவுகள், தோழமைக் கட்சிகளுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை எ.வ.வேலுவே கவனித்து வருவதாக சொல்கின்றனர் திமுகவினர்.

இதேபோல், மின்சாரத் துறை அமைச்சரான செந்தில்பாலாஜியின் தேர்தல் பணிகளும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து பாஜகவிற்கு மாறி, மாநிலப் பட்டியலின பிரிவு பொதுசெயலாளராக அங்கு பதவி வகித்து வந்த விநாயகமூர்த்தியை, அதிரடியாக திமுகவில் சேரவைத்து செந்தில்பாலாஜி தனது அதிரடியைத் தொடங்கியுள்ளார்.

இதேபோல், மேலும் பல அதிருப்தியாளர்களை திமுகவில் இணைய வைக்க திட்டமிட்டுள்ளாராம் செந்தில்பாலாஜி. தனக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் கரூர், கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளை முகாமிட வைத்து தேர்தல் பணியை இவர் தீவிரப்படுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், தங்கம் தென்னரசு போன்றவர்கள் வெளிநிகழ்வுகளில் அதிகம் தட்டுப்படாமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் வாக்குகளை வளைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக, ஒவ்வொரு அமைச்சரும் தனது மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மூலமே, நிதி விவகாரங்களைக் கையாள்வதால், உள்ளூர் நிர்வாகிகளிடையே அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ - அதிமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு பிரச்சினையால் தொய்வடைந்திருந்த பிரச்சாரம் இப்போது தீவிரமடைந்துள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, இன்று காலை அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது பிரச்சாரத்தை மணல்மேடு பகுதியில் தொடங்கினார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான தேர்தல் பணிக்குழு பூத் வாரியான வாக்காளர் பட்டியலுடன் துல்லிய ஆய்வுப் பணியை முடித்துள்ளனர். இதில் இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், பெண்கள், இளைஞர்கள் வாக்குகள், அதிமுக வாக்குகள் என வாக்காளர் பட்டியலை ‘ஸ்கேன்’ செய்து, அதனை, அந்தந்த பகுதியில் தேர்தல் பணியாற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வசம் ஒப்படைத்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜாவின் பங்களிப்பு இதில் அதிகமாக இருந்துள்ளது.

மகளின் திருமண வேலை: முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், கருப்பணன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் முகங்களும் ஆங்காங்கே தென்படுகின்றன. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகளுக்கு வரும் 23-ம் தேதி மதுரையில் திருமணம் நடக்கவுள்ளது. இந்தப் பணிகளை ஒத்தி வைத்துவிட்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையத்தில் முகாமிட்டுள்ள ஆர்.பி. உதயகுமார் பட்டறையில் சம்மட்டியால் அடித்தும், கடைகளில் வியாபாரம் செய்தும் கலகலப்பாய் வாக்கு சேகரித்து வருகிறார்.

ஈரோடு ‘ஃபார்முலா’ - இடைத்தேர்தல் என்றாலே, ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்ற சொல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும், ‘மைக்ரோ' அளவில் ஒவ்வொரு 100 வாக்கிற்கும் நிர்வாகிகளை நியமித்து, வாக்காளர்களிடம் நெருக்கத்தை இரு கட்சிகளும் ஏற்படுத்தி வருகின்றன. இதில், ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் தேர்தல் பணிமனை அமைத்துள்ள திமுக கூட்டணியினர், அப்பகுதியில் உள்ள ஆண், பெண் வாக்காளர்களை மாலை 6 மணிக்கு அழைத்து, 9 மணி வரை அமர வைத்து வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர்.

இதர கட்சியினர் வாக்கு சேகரிக்க வரும்போது, வீட்டில் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு எனத் தெரிவித்த திமுக பிரமுகர் ஒருவர், அதற்காக கணிசமாக செலவிட்டு வருவதாகத் தெரிவித்தார். இரு கட்சியிலும் ‘ஆரத்தி’க்கு என தனி கவனிப்பு இருப்பதால், அதற்கென பெண் வாக்காளர்கள் வரிசை கட்டி நின்று வருகின்றனர்.

இதுபோல், இன்னும் பலவகையான ‘ஃபார்முலா’க்களை ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் இரு பிரதான கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும்.

இதனிடையே, அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த காரணத்தால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். | அதன் விவரம் > ஈரோடு கிழக்கில் போட்டி இல்லை என தினகரன் அறிவிப்பு


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x