கிருஷ்ணகிரியில் அரசு பஸ் ஓட்டுநரை தாக்கிய சிஐஎஸ்எஃப் வீரர்கள்: பொதுமக்களை துப்பாக்கியால் மிரட்டியதால் பரபரப்பு

கிருஷ்ணகிரி அருகே ராணுவ தளவாடங்கள் ஏற்றிச் சென்ற மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை துணை ராணுவ வீரர்கள், அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதால், அவர்களை பயணிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கிருஷ்ணகிரி அருகே ராணுவ தளவாடங்கள் ஏற்றிச் சென்ற மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை துணை ராணுவ வீரர்கள், அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதால், அவர்களை பயணிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ராணுவ தளவாடங்கள் ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு வழிவிடாமல் இயக்கியதாகக் கூறி, அரசு பேருந்து ஓட்டுநரை ராணுவ வீரர்கள் தாக்கினர். மேலும், முற்றுகையிட்ட பொதுமக்களை துப்பாக்கிக் காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணுவ போர் தளவாடங்களை ஏற்றிக் கொண்டு, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF) துணை ராணுவத்தினர் உதவி ஆய்வாளர் பிரதாப் தலைமையில் இன்று (6-ம் தேதி), பெங்களூர் நோக்கி சென்றனர். ராணுவ தளவாடஙகள் ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன்பும், பின்பும் 3 (ESCORT) வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, அவ்வழியே கிருஷ்ணகிரியில் இருந்த ஓசூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. அப்போது, ராணுவ தளவாடம் ஏற்றிச் சென்ற வாகனத்தை அரசு பேருந்து முந்திச் செல்லும் போது, ஓட்டுநருக்கும், துணை ராணுவ வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், துணை ராணுவ வீரர்கள், பேருந்து ஓட்டுநர் தமிழரசுவை தாக்கிவிட்டு சென்றனர். ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர், அச்சாலையில் சோநாதப்புரம் பிரிவு மேம்பாலம் அருகே ராணுவ தளவாடங்கள், வாகனத்தை மறித்து பேருந்தை நிறுத்தினார்.

மேலும், பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள், துணை ராணுவ வீரர்களிடம் ஓட்டுநரை தாக்கியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். இதுகுறித்து துணை ராணுவ வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 5-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், துப்பாக்கியுடன் பொதுமக்களை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டி கலைந்து செல்லுமாறு மிரட்டினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த குருபரப்பள்ளி போலீஸார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஓட்டுநரை தாக்கிய ராணுவ வீரர்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணுவ போர் தளவாடங்களை ஏற்றி சென்ற வாகனங்கள்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணுவ போர் தளவாடங்களை ஏற்றி சென்ற வாகனங்கள்.

போலீஸார் சமாதான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு ராணுவ உதவி ஆய்வாளர் பிரதாப், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து, அங்கிருந்த ராணுவ தளவாடங்கள் ஏற்றி வந்த வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களும் கலைந்து சென்றனர். மேலும், காயம் அடைந்த ஓட்டுநர் தமிழரசுவை, மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக நிகழ்விடத்தில் எஸ்பி சரோஜ்குமார் தாகூர் விசாரணை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in