

அதிமுகவின் வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு கடந்த 31-ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை தேமுதிக, நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தம் 20 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவபிரசாந்த், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்த நிலையில், மனுத் தாக்கல் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய நிலையில், அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்து செயல்பட பாஜக வலியுறுத்தல்: பரபரப்பான அரசியல் சூழலில் வெள்ளிக்கிழமை காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, "தமிழக மக்களுக்கு எதிரான கட்சி திமுக. திமுக அரசு மீது மக்களிடம் நம்பிக்கை இல்லை. மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை உயர்த்தி திமுக தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. இந்த ஆட்சி மக்களிடம் கெட்ட பெயர் வாங்கியுள்ளது.
இந்த நேரத்தில் நிலையான, உறுதியான தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்திற்கு தேவை. திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் உறுதியான, நிலையான வேட்பாளர் வேண்டும். திமுகவை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுமாறு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திடம் கூறினோம்" என்றார்.
அதிமுக இணைப்புக்கு மிக அருகில் நெருங்கிவிட்டோம்’ - சசிகலா: அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது போல் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற வார்த்தையை தான் இப்பவும் சொல்கிறேன். எப்போதும் சொல்கிறேன். அதிமுக இணைப்புக்கு மிக அருகில் நெருங்கி விட்டோம். தனித்தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை. ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பது தான் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை நான் சொல்வது. ஒன்றிணையும் சூழ்நிலை வந்துவிட்டது என்பது எனக்கு தெரிகிறது" என்றார்.
“பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம்” : "பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜக வட மாநிலங்களில் எப்படிபட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது, பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சியை எப்படி பாஜக பிடித்தது என்பது எங்களுக்கும் தெரியும்… மக்களுக்கும் தெரியும்… உங்களுக்கும் தெரியும்… எனவே, நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனியாக தான் நின்றது. மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். இதன் காரணமாக பாஜக எங்களுடன் பணியாற்ற விரும்பலாம். காத்திருந்து பாருங்கள். திமுகவைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம்" என்றார்.
அதிமுக விவகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு: தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இபிஎஸ், ஒபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
வேட்பாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு முடிவுக்கு கையெழுத்து பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அனுப்பலாம். பொதுக்குழு முடிவிற்கு கையெழுத்திடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுக்கலாம்" என்று உத்தரவிட்டுள்ளது.
கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம் - மத்திய அரசு:உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளுக்கான நியமனம் விரைவில் நடைபெறும் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலீஜியம் மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இரண்டு நீதிபதிகள் உள்ளிட்ட 5 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரைத்திருந்தது.
பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இந்த ஆவணப்படத்தின் தடைக்கான உண்மையான ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதானி குழும விவகாரம்: பிப்.6-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எல்ஐசி நிறுவனம் மற்றும் எஸ்பிஐ வங்கிகள் முன்பாக வரும் பிப்.6-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
டவ் ஜோன்ஸ் நிலைக்குறியீட்டில் இருந்து அதானி எண்டர்பிரைசஸ் நீக்கம்: பங்கு முறைகேடு, பண மோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் அதானி குழுமங்களின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசர்ஸ், டவ் ஜோன்ஸ் நிலைக்குறியீட்டில் இருந்து பிப்,7-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தைகளான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களை அவைகளின் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் வைத்துள்ளது.
பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்: தெலுங்கு சினிமாவின் மூத்த கலைஞரும், தாதா சாகேப் விருது பெற்ற பழம்பெரும் இயக்குநருமான கே.விஸ்வநாத் மறைவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தங்களின் இரங்கல் செய்திகளைப் பதிவு செய்து வருகின்றனர். உடல்நலக் குறைவால் காலமான அவருக்கு வயது 92.
இதனிடையே, ‘பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் காலமானார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில், ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் அழுத்தமான பாத்திரத்தால் அனைவரின் மனங்களையும் வென்றவர் நெல்லை தங்கராஜ்.