

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவபிரசாந்த், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் இன்று (பிப்.3) வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக, ஈரோட்டில் அமமுக சார்பில், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அக்கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு பேசியதாவது, "எங்கள் வேட்பாளர் சிவபிரசாந்த் பொறியியல் பட்டதாரி. கட்சியின் மாவட்ட மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். 29 வயது இளைஞரான சிவபிரசாந்த் வெற்றி பெற்றால் மக்களுக்கு திறம்பட சேவை செய்வார். பணம் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி, இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியை பெற நினைக்கிறது.
போராட்டம் நடத்துவோம்: தேர்தல் ஆணையம் அதிக பார்வையாளர்கள் மற்றும் மத்தியப் படைகளை நியமித்து பணபலத்தையும், ஆள்பலத்தையும் தடுக்கவில்லை என்றால், அமமுக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். எங்களுக்கும் அதிமுகவிற்கும் தொடர்பில்லை. அமமுக ஒரு தனி அமைப்பாகவே செயல்படுகிறது.
தினகரன் பிரச்சாரம்: சசிகலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டார். எனவே, அந்த நிலையில், அனைத்து எம்ஜிஆர் ஆதரவாளர்களையும் ஒன்றிணைக்க அவர் விரும்பினார், மேலும் திமுகவை தோற்கடிக்க அனைத்து ஜெயலலிதா ஆதரவாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று எங்கள் தலைவர் டிடிவி தினகரன் விரும்பினார். ஆனால், அதை இபிஎஸ் ஏற்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 12-ம் தேதி டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்யவுள்ளார்" என்றார்.