

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனத்துக்கான தேர்தலை நடத்த அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சிறுபான்மையினர் நலத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்துவதற்கான அதிகாரியாக, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சிறப்புச் செயலர் வி.சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் வக்ஃப் வாரிய தேர்தல் நடத்தும் அதிகாரியாக தலைமைச் செயலகத்தில் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையில் துணைச் செயலாளராக பணியாற்றும் எஸ்.சையது காசீம் நியமிக்கப்பட்டுள்ளார். இரு அதிகாரிகளும் இணைந்து வக்ஃப் வாரியத்துக்கான தேர்தலை நடத்துவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.