கோப்புப்படம்
கோப்புப்படம்

டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

Published on

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986 கோடி வரி செலுத்த வேண்டுமென வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு கடந்த 2021-22-ஆம் நிதியாண்டிற்கு 7 ஆயிரத்து 986 கோடியே 34 லட்ச ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித் துறை அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

2016-17ஆம் நிதி ஆண்டுக்கான மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து இதேபோன்ற வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், 2021-22ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், இரு நீதிபதிகள் அமர்வை அணுகுமாறும் உத்தரவிட்டிருந்தார்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறை தரப்பில், "2016-17ஆம் ஆண்டில் மாநில அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் மதிப்பு கூட்டு வரியாக செலுத்திய 14,000 கோடி ரூபாய் வரி விதிப்புக்கு உட்பட்டது என்றும், மாநில அரசு நிறுவனங்கள் சட்டப்படி வருமான வரி செலுத்து வேண்டும்" என்று தெரிவித்திருந்தது.

அப்போது, டாஸ்மாக் நிறுவனம் சார்பில், "மதிப்புக் கூட்டு வரி செலுத்தியதற்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை" என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வருமான வரித் துறை நோட்டீஸுக்கு இரண்டு வார காலத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in