

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட மலையடிப்பட்டியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி 24-வது வார்டு மலையடிப்பட்டி பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என புகார் கூறும் அப்பகுதி மக்கள், இதனால் தாங்கள் மிகுந்த சிரமப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யவும், கழிவுநீர் கால்வாய், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் பலமுறை மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மலையடிப்பட்டி பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ராஜபாளையம் வடக்கு போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.