

அரியலூர்: பயம், தயக்கம் தவிர்த்தால் மாணவர்கள் படிப்பில் எளிதில் வெற்றி பெற முடியும் என 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான படிப்போம் உயர்வோம் நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், படிப்பிலும் வாழ்விலும் வெற்றிகளைப் பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கும் வகையிலும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஆதித்ய பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் மற்றும் சிவசங்கர் அறக்கட்டளை சார்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான படிப்போம் உயர்வோம் எனும் வழிகாட்டி நிகழ்ச்சி அரியலூர் ரெட்டிபாளையத்தில் உள்ள அல்ட்ராடெக் ஆலையின் மதுபன் கலையரங்கில் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.
அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவன ரெட்டிபாளையம் ஆலை துணைத் தலைவர் க.சந்தான மணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில், இலக்கிய, ஆன்மிக சொற்பொழிவாளர் சுமதிஸ்ரீ பேசியது: மாணவர்களின் தலையெழுத்தை மாற்றியமைப்பது கல்வி. மாணவர்கள் சின்னச் சின்ன ஆசைகளை விட்டுவிட்டு பெரிய ஆசைகளை அடைய முயற்சி செய்ய வேண்டும். அதற்கு கல்வியை தன்வசப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் பிறரின் வெற்றிகளை சொல்லிக் கொடுக்கும் அதே வேளையில், அவர்கள் சந்தித்த தோல்விகளையும் எடுத்துக் கூற வேண்டும்.
அப்போது தான் மாணவர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டு போக மாட்டார்கள். மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டுமென்றால் அதற்கு நிச்சயம் கல்வி வேண்டும் என்பதை மாணவர்கள் உணர்ந்து, நன்றாக படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
நேரம், சொல், பணம்: வருமான வரித் துறை ஓய்வு பெற்ற அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசியது: மாணவர்கள் 10-ம் வகுப்புக்குப் பின் என்ன படிக்க வேண்டும் என்பதனை இப்போதே தீர்மானித்து படிக்க வேண்டும். கல்வியின் முதல் படி உங்களின் வாழ்வை மாற்றி அமைக்கும். மாணவர்களுக்கு எதிலும் சந்தேகம் எழுந்து, கேள்வி உண்டாக வேண்டும். கேள்வியில் தொடங்கி கேள்வியில் முடிவதே அறிவியல் ஆகும். அறிவியலுக்கு தீர்வே கிடையாது. அது கேள்விகளை தொடர்ந்து கொண்டே செல்லும். அனைத்து உயர் கல்வி படிப்புகளுக்கும் தற்போது நுழைவுத் தேர்வுகள் வந்துவிட்டன.
எனவே, அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். நேரம், சொல், பணம் ஆகியவற்றை மாணவர்கள் தேவையின்றி செலவு செய்யக் கூடாது. படிப்பை சுகமாக நினைத்துப் படித்தால் வெற்றி பெறுவது எளிது என்றார்.
பயம், தயக்கம், வெட்கம் கூடாது: பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர் பேசியது: 10-ம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலையுடன் படிப்பு, படிப்பு முடித்தவுடன் வேலை, படித்த பிறகு வேலை என பல்வேறு வகையிலான வேலைவாய்ப்புகள் உள்ளன. இதில் எவை நமக்கு சரியாக இருக்கும் என முதலில் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பயம், தயக்கம் தவிர்த்தால் மாணவர்கள் படிப்பில் எளிதில் வெற்றி பெற முடியும்.முடியாது என்ற வார்த்தையையும் விட்டுவிட வேண்டும்.
அதேபோல, மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை தவிர்க்க வேண்டும். ஏவுகணை போல மேலே செல்லச் செல்ல தேவையற்ற சுமைகளை உதறி விட வேண்டும். உலகில் வெற்றிப் பெற்றவர்களின் வரலாறுகளை மாணவர்கள் படிக்க வேண்டும். மாணவர்கள் தங்களிடம் உள்ள திறனைக் கண்டறிந்து அதன் வழியில் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது அனைவரும் உச்சத்தை அடையலாம் என்றார்.
தொடர்ந்து, உயர் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவன ரெட்டிபாளையம் ஆலை மேலாளர் (சமூக நலன்) ஆ.கமலக்கண்ணன், ‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர் டி.ராஜ்குமார், திருச்சி மண்டல உதவி மேலாளர் ரா.ஜெயசீலன், மீடியா பார்ட்னர் அரியலூர் ஏ1 தொலைக்காட்சி மாரிமுத்து மற்றும் 15 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார். கடந்த 2 தினங்களாக நடைபெற்ற இந்த வழிகாட்டி நிகழ்ச்சித் தொகுப்பு, அரியலூர் ஏ1 தொலைக்காட்சியில் பிப்.3-ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.