

அரியலூர்: போட்டிகள் நிறைந்த இந்த உலகில் மாணவர்கள் திட்டமிட்டு கல்வியை பயில வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், படிப்பிலும் வாழ்விலும் வெற்றிகளைப் பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கும் வகையிலும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஆதித்ய பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் மற்றும் சிவசங்கர் அறக்கட்டளை சார்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான ‘படிப்போம் உயர்வோம்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி அரியலூர் ரெட்டிபாளையத்தில் உள்ள அல்ட்ராடெக் ஆலையின் மதுபன் கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
2 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசியது:
போட்டிகள் நிறைந்த இந்த உலகில் மாணவர்கள் கல்வியை திட்டமிட்டு பயில வேண்டும். இந்த வயதில் மாணவர்கள் கல்வியைத் தவிர வேறு எந்த ஒரு சிந்தனைக்கும் உள்ளாகாமல் இருக்க வேண்டும். நான் செல்லும் இடங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடுவேன். அவர்கள் தான் உண்மை நிலையை சொல்வர். மக்களுக்கு குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் பேசும்போது, அவர்கள் ஒளிவு மறைவு இன்றி சொல்வார்கள். மேலும், மாணவர்களின் சமூக பொறுப்புணர்வையும் உணர்ந்து கொள்ள முடியும்.
‘தி இந்து’ குழுமம் நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளது. அதேபோல, பிர்லா குழுமமும் சமூகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை வழங்கும் இரு நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள், இங்கு தெரிந்து கொள்ளும் விஷயங்களை, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாத மாணவர்களுக்கும் பகிர வேண்டும்.
தமிழக மாவட்டங்களில் அகர வரிசைப்படி அரியலூர் மாவட்டம் முதன்மை இடத்தில் இருந்தாலும், கல்வி, தொழில் உள்ளிட்ட துறைகளில் பின்தங்கியே உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் அனைத்திலும் அரியலூர் மாவட்டத்தை முன்னெடுத்து வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
வாசிப்பு அவசியம்: கல்வி உளவியலாளர் முனைவர் சரண்யா ஜெயக்குமார் பேசியது: மாணவர்கள், கல்வியை ஒரு போதைப் பொருளாக நினைத்து படிக்க வேண்டும். அதேபோல மூளைக்கு ஓய்வு கொடுத்து நன்றாக தூங்க வேண்டும். மதிப்பெண்களுக்கேற்ப உயர் கல்வியில் இடம் கிடைக்கும். அதிக மதிப்பெண்கள் பெற்றால், சிறந்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும். அதனால் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவும் அதிக வாய்ப்புள்ளது. இந்த போட்டி நிறைந்த காலக்கட்டத்தில் பணம் சம்பாதிக்க கல்வி மிக முக்கியம்.
காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்களை மாணவர்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும். உடலிலிருந்து வியர்வை வெளியேறும் வகையில் தினமும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும். அது விளையாட்டாகவும் இருக்கலாம். தினந்தோறும் நாளிதழ்கள், புத்தகங்களை அவசியம் படிக்க வேண்டும். வீட்டில் எந்த பிரச்சினை இருந்தாலும், அதனை பெற்றோர் பார்த்துக் கொள்வர். படிப்பில் மட்டுமே மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
72 நுழைவுத் தேர்வுகள்: கல்வி ஆலோசகர் அஸ்வின் ராமசாமி பேசியது: உயர் கல்வி பயில 72 வகையான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதனை எதிர்கொள்ள மாணவர்கள் தற்போதே தயாராக வேண்டும். பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏதாவது ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து படிக்காமல், தங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அந்தப் படிப்பை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்க வேண்டும். போட்டி நிறைந்த உலகில், எந்தப் படிப்புக்கு என்ன வேலை உள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களையும், பெற்றோரையும் மதிக்கக் கற்றுக்கொள்ளும் மாணவன் வாழ்க்கையில் முன்னேறுவது உறுதி என்றார்.
தொடர்ந்து, உயர் கல்வி படிப்புகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட மாணவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஆதித்ய பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் ரெட்டிபாளையம் ஆலைத் தலைவர் சஜேந்திர குமார், துணைத் தலைவர் க.சந்தானமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் (சமூக நலன்) ஆ.கமலக்கண்ணன், அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜபிரியன், பள்ளி ஆய்வாளர் பழனிசாமி, இந்து தமிழ் திசை பொது மேலாளர் டி.ராஜ்குமார், திருச்சி மண்டல உதவி மேலாளர் ரா.ஜெயசீலன், மீடியா பார்ட்னர் அரியலூர் ஏ1 தொலைக்காட்சி மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், 15 அரசுப் பள்ளிகளிலிருந்து 10-ம் வகுப்பு படிக்கும் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இந்து தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.