குடியரசு தின விழா முதல் சிறப்பு கிராம சபை தீர்மானம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.26, 2023 

குடியரசு தின விழா முதல் சிறப்பு கிராம சபை தீர்மானம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.26, 2023 
Updated on
3 min read

கடமை பாதையில் முதன்முறையாக குடியரசு தின விழா: நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

ஆங்கிலேயர் காலத்தில் ‘கிங்ஸ் வே’என்று பெயர்சூட்டப்பட்டு, ராஜபாதை என அறியப்பட்டு வந்த 3 கிமீ பாதை அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் பெயர் ‘கடமை பாதை ’என மாற்றப்பட்டது. காலனியாதிக்க சுவடுகளின் அடையாளத்தை மாற்றும் வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெயர்மாற்றம் செய்யப்பட்ட ‘கடமை பாதையில் முதல் முறையாக குடியரசு தினவிழா பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. அதேபோல் அக்னிபாதை திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்த முதல் படைப்பிரிவு வீரர்களும் இந்த அணிவகுப்பில் முதன்முறையாக பங்கேற்றனர்.

சென்னையில் தேசியக் கொடியேற்றினார் தமிழக ஆளுநர்: 74வது குடியரசு தின விழாவை ஒட்டி வியாழக்கிழமை காலை 8 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

முதலில் வந்த 'தமிழ்நாடு வாழ்க' வாசகம் தாங்கிய வாகனம்: 74-வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், அணிவகுப்பு ஊர்வலத்தில் முதலில் வந்த தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டிருந்த "தமிழ்நாடு வாழ்க" வாகனம் பார்வையாளர்களின் கவனம் பெற்றது.

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட அலங்கார ஊர்திகளில், காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அலங்கார ஊர்திக்கு இரண்டாம் பரிசும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலங்கார ஊர்திக்கு 3-வது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுக்கு தேர்வான பழங்குடிகளுக்கு ஆளுநர் வாழ்த்து: தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கும் மற்ற பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் ஆபத்தான பாம்புகளை கையாள்வதில் நமது பூர்வகுடிகள் கொண்ட அறிவின் களஞ்சியமாக விளங்குபவர்கள். ஏராளமான விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றிய அரிய பாம்பு விஷங்களை சேகரிப்பதிலும் இவர்கள் உதவியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம்: குடியரசு தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் உள்ளாட்சி தினமென 3 முறை பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் இன்று 4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தருமபுரி மாவட்டம் ஒசஅள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘தேசிய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்’ - வரவேற்பு: ஒற்றை மொழி ஆதிக்கத்தை முன்னெடுக்கும் சக்திகளுக்கு மத்தியில், தேசிய மொழிகளில் தீர்ப்புகளை வெளியிடும் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை முக்கியமானது என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குட்கா மீதான தடை நீக்கம்: மேல்முறையீடு செய்ய கோரிக்கை: "தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அதிமுக தேர்தல் பணிக்குழு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அணியில் தமிழக வீரார்கள் இடம்பெற அஸ்வின் வழங்கிய யோசனை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கிரிக்கெட்டை எடுத்து செல்லும் வகையில் டி.என்.சி.ஏ திறமையாளர்கள் கண்டறியும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு திட்டம் குறித்த அறிமுக விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசுகையில், "தமிழகத்தில் நிறைய வீரர்கள் இருந்தும் இந்திய அணிக்கு செல்லவில்லை என தொடர்ச்சியாக வரும் விமர்சனங்களை பார்த்து வருகிறோம். ஆனால் இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களை எடுத்து பார்த்தால் அவர்கள் ரஞ்சி கோப்பை போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி இருப்பார்கள். மும்பை வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என தொடர்ந்து அரசியல் நோக்கில் பார்க்க கூடாது. மும்பை அணி 45 முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. நாமும் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு நிறைய வீர்ரார்கள் செல்ல வாய்ப்புள்ளது” என்றார்.

மீண்டும் சமூக வலைதளங்களுக்கு திரும்பும் ட்ரம்ப்: பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கால தடை முடிந்து அவர் மீண்டும் அவற்றில் அனுமதிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் அவர் இந்தத் தளங்களில் இயங்க அனுமதிகப்படுவார் என்று மெட்டா சர்வதேச விவகாரங்களின் தலைவர் நிக் க்ளெக் தெரிவித்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in