ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | இளங்கோவனை, சங்கடத்திற்கு உள்ளாக்கும் சமூகவலைதளங்கள்

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன்
Updated on
2 min read

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், முந்தைய காலங்களில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்தில் இவை முக்கிய இடத்தை பிடிப்பதால், அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவை அடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னணி திமுக நிர்வாகிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். பெரியாரின் பேரன் திருமகன் ஈவெரா மறைவையடுத்து, ஈவிகேஎஸ் இளங்கோவனே வேட்பாளராக போட்டியிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பினார்.

அதன்படியே, இடைத்தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஈவிகேஎஸ் இளக்கோவன், திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவராக விளங்கிய ஈவிகே சம்பத் - சுலோசனா தம்பதியரின் மகனாவார். 'பெரியாரின் பேரன்' என்ற அடைமொழியுடன் அறியப்படும் ஈவிகேஎஸ் இளங்கோவன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பதவியில் தொடங்கி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வரை கட்சிப்பதவிகளையும், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி, மத்திய இணை அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.

அதிரடி அரசியல் தமிழக காங்கிரஸ் கட்சியில் தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை ஈவிகேஎஸ் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதோடு, தமிழக அரசியல் வரலாற்றில் அதிரடியாக அரசியல் கருத்துகளையும், விமர்சனங்களை முன் வைப்பதிலும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து பலமுறை சர்சைக்குள்ளாகி இருக்கிறார். அதேபோல், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்களை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

ஈரோடு கிழக்கில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அவரது முந்தைய பேச்சுகள், விமர்சனங்கள் தற்போது எதிராக திரும்பியுள்ளது. திமுகவிற்கு எதிராகவும், 2 ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான கருத்து, சென்னையில் பத்திரிகையாளரிடம் ஒருமையில் பேசிய சம்பவம், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மறைவு குறித்து தெரிவித்த கருத்துகள் போன்றவை குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சமூக வலைதள குழுக்களில் இப்பதிவுகள் வைரலாகி வருகிறது.

இது திமுக கூட்டணியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேசும்போது, ''ஈவிகேஎஸ் இளக்கோவன் பேசிய கருத்துகளை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்'' என்று என குறிப்பிட்டதன் மூலம், இளங்கோவனின் முந்தைய அரசியல் செயல்பாடுகள் குறித்த விமர்சனம், ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றே கருதப்படுகிறது. சமூக வலைதளங்கில் மேற்கொள்ளப்படும் இந்த பிராச்சாரங்களை திமுக கூட்டணிக் கட்சிகளும், வேட்பாளர் இளங்கோவனும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in