இருக்கை இல்லாததால் குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக எம்.பி: புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் நடந்த குடியரசு தினவிழா
புதுக்கோட்டையில் நடந்த குடியரசு தினவிழா
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று (ஜன.26) நடைபெற்ற குடியரசு தின விழாவில் தனக்கென இருக்கை ஒதுக்காததால் விழாவை திமுக எம்.பி புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் ஆட்சியர் கவிதா ராமு தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், எஸ்.பி வந்திதா பாண்டேவுடன் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு அவர்களது பெயர்களுடன் கூடிய இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால், புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக மாநிலங்களை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவுக்கென தனியாக இருக்கை ஒதுக்கவில்லை.

புதுக்கோட்டை குடியரசு தினவிழாவில் முக்கிய விருந்தினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகள்
புதுக்கோட்டை குடியரசு தினவிழாவில் முக்கிய விருந்தினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகள்

விழாவில் கலந்துகொள்ள வந்த அவர், எங்காவது இருக்கை இருக்கிறதா? என அங்கும் இங்கும் தேடிப் பார்த்தார். இருக்கை இல்லாததை உறுதி செய்த அவர், அங்குள்ள ஒரு இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் விழாவை புறக்கணித்த எம்.பி, எம்.எம்.அப்துல்லா அங்கிருந்து வெளியேறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குடியரசு தினவிழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு
குடியரசு தினவிழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

இது குறித்து எம்.எம்.அப்துல்லா கூறியபோது, "எனக்கு வேறொரு வேலை இருந்ததால் நான் கிளம்பிவிட்டேன். மற்றபடி வேறொன்றும் இல்லை. நான் அங்கிருந்து கிளம்பியதற்கு இதுவே காரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம்" என சிரித்தபடி கூறினார். சபை நாகரிகம் கருதி அவர் இவ்வாறு கூறி இருக்கலாம் என அங்கிருந்தோர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in