

சென்னை: மொழிப்போர் தியாகிகள் நினைவுநாளை ஒட்டி, தமிழ் மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழ் மொழியைக் காப்பதற்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதைசெலுத்தும் வகையில் மொழிப்போர் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதன் பகுதியாக சென்னை, கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தமிழ்மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளின் உருவப் படங்களுக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ``இந்திதான் இந்தியா எனின் அந்நிலை மாற்ற இன்னுயிரை ஈந்தேனும் தமிழ் மானம் காப்போம் என உயிர்நீத்த மொழிக்காவலர்களின் திருவுருவப் படங்களுக்குக் கிண்டி மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினேன். இனி ஓர்உயிரையும் இழக்காமல் நம் உரிமையை நிலைநாட்டுவோம்'' எனக் கூறியுள்ளார்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், ``இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, மாபெரும் புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பதை உலகுக்கு எடுத்துரைத்து, அன்னைத் தமிழுக்காகத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மாவீரர்களான, மொழிப்போர் தியாகிகளுக்கு எனது வீரவணக்கங்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கட்சி நிர்வாகிகளோடு ராயபுரத்தில் இருந்துமூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் வரைமவுன ஊர்வலம் நடத்தினார். தொடர்ந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.
வடசென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், எழிலரசன், தாயகம் கவி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோவும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், ``அன்னைத் தமிழ்மொழியைக் காக்க தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றும் வீரவணக்க நாளில்அவர்களைத் தாய்மொழிப் பற்றோடு நினைவு கூர்ந்து வணங்குவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.