Published : 26 Jan 2023 02:05 AM
Last Updated : 26 Jan 2023 02:05 AM

ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தான் உண்மையான வேட்பாளர் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

ஈரோடு: ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான வேட்பாளர்’ என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவையடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 21-ம் தேதி அமாவாசை நாளன்று திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு பிரச்சாரத்தை தொடங்கினர். இந்நிலையில், திமுக கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ. வேலு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: ஈரோட்டில் நாங்கள் ஐந்து நாட்களாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் துக்கம் கலந்த வரவேற்பு அளித்தார்கள். திருமகன் ஈவெரா இழப்பை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு, அவர் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். திருமகன் ஈவெரா இறப்பு செய்தியையை அறிந்த முதல்வர் கடும் அதிர்ச்சியடைந்தார். ஈரோடு வந்து அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். திருமகன் நினைவாக அவர் தங்கி இருந்த வீடு உள்ள கச்சேரி வீதிக்கு, திருமகன் ஈவெரா வீதி என பெயர் மாற்றினார். தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் இளங்கோவன், எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளராக உள்ளார். திருமகன் இந்த தொகுதியில் என்னென்ன செய்ய நினைத்தாரோ அதனை கண்டிப்பாக இளங்கோவன் செய்து காட்டுவார், என்றார்.

அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது: இளங்கோவனும் நானும் ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறோம். இளங்கோவனுக்கும், திமுகவும் இடையே உள்ள உறவை பிரிக்க முடியாது. இளங்கோவனை பல ஆயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். திருமகன் செய்ய நினைத்த பணியை இளங்கோவன் கண்டிப்பாக செய்வார், என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈ.வி. கே.எஸ் இளங்கோவன் பேசும்போது, "இந்த இடைத்தேர்தலில் நான் நான் வேட்பாளர் என்றாலும் கூட, உண்மையான வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் முத்துசாமிதான். என் மகன் செய்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் போட்டியிட ஒத்துக்கொண்டேன். என் மகன் இந்த தொகுதி வளர்ச்சிக்காக கடந்த ஒன்றை வருடமாக கடுமையாக உழைத்து உள்ளார். என் மகனுக்கு அமைச்சர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்தனர்.

பொதுத்தேர்தலின்போது இந்த தொகுதியில் அமைச்சர் முத்துசாமி போட்டியிடுவதாக இருந்தது. நான் அமைச்சர் முத்துசாமியிடம் என் மகனுக்காக தொகுதியை கேட்டவுடன், அவர் சிறிதும் யோசிக்காமல் இந்த தொகுதியை விட்டுக் கொடுத்தார். வெற்றி வாய்ப்பு அவருக்கு இருக்கிறது என்று தெரிந்தும்கூட நான் கேட்டதற்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்தார். இந்த மனது யாருக்கும் வராது. என் மகன் தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்துள்ளார். போர் வீரராக இருந்து தமிழகத்தை நமது முதலமைச்சர் காத்துக் கொண்டிருக்கிறார்" இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் எம்பிக்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் மற்றும் சஞ்சய் சம்பத் போன்ற பிரமுகர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x