Last Updated : 26 Jan, 2023 12:46 AM

 

Published : 26 Jan 2023 12:46 AM
Last Updated : 26 Jan 2023 12:46 AM

புதுச்சேரி சிறந்த வளர்ச்சியை பெற்றுவருவதனால்தான் ஜி 20 மாநாடு இங்கு நடக்கவுள்ளது - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் சிறந்த வளர்ச்சியை பெற்று வருவதன் வாயிலாகத்தான் ஜி20 மாநாடு இங்கு நடைபெற இருக்கின்றது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு தியாகிகளைக் கவுரவிக்கும் விதமாக தேநீர் விருந்து புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தியாகிகளைக் கவுரவித்து பேசினார். அதில், "நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளில் மிக முக்கியமானவர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். அவர்களின் போராட்டத்தின் வாயிலாக நம்முடைய நாடு விடுதலை அடைந்தது. நமது நாட்டின் கலை, பண்பாடு அத்தனையும் பழமைமாறாமல் எந்தளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது, புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக எத்தகைய வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் எண்ணிப்பார்த்து பெருமிதம் கொள்கின்ற நிலையில் உள்ளோம். இதில் எந்தவித ஐய்யமும் இல்லை.

நமக்குரிய தேவையை நாம் பூர்த்தி செய்துகொள்ளுகின்ற நாடாக உலக அளவில் நாம் வளர்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரே உலகம், ஒரே நாடு, ஒரே எதிர்காலம், இப்படிப்பட்ட ஒரு நிலையில் எண்ணங்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. உலக வளர்ச்சி, சூழல் இவற்றையெல்லாம் நிர்ணயிக்கின்ற ஒரு நிலையில் நம்முடைய நாடு வளர்ந்திருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. தியாகிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து, உயிர் தியாகம் செய்து பெற்றுத்தந்த விடுதலை மூலம் நம்முடைய நாடு எப்படி வளர்ந்திருக்கின்றது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய மக்களுக்கு பேரிழப்பு இல்லாத அளவுக்கு பல்வேறு முடிவுகளை பிரதமர் எடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுமட்டுமின்றி அதற்குரிய தடுப்பூசியை நம்முடைய நாட்டிலேயே கண்டுபிடித்து, உலக நாடுகளுக்கு வழங்கினோம். இது நாம் மிகுந்த பெருமைக்கொள்ளும் ஒன்று.

விடுதலைக்கு பிறகு நம்முடைய தலைவர்கள் எடுத்த முடிவின் வாயிலாக, உழைப்பின் வாயிலாக நம்முடைய நாடு வளர்ந்திருப்பதை கண்கூடாக நாம் பார்க்கலாம். புதுச்சேரி மாநிலம் சிறந்த வளர்ச்சியை பெற்று வருகின்றது. அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட வளர்ச்சியை பெற்றதன் வாயிலாகத்தான் பல்வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஜி20 மாநாடு இங்கே நடைபெற இருக்கின்றது. ஜி20 மாநாடு நடைபெறும் தகுதியை நாம் பெற்றிருக்கின்றோம்.

தியாகிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கான இடம் தேர்வு செய்திருக்கின்றோம். விரைவில் பட்டா வழங்கப்படும்" இவ்வாறு தெரிவித்தார்.

விழாவில் அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், எம்எல்ஏ அனிபால் கென்னடி, ஆட்சியர் வல்லவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x