

சென்னை: "தமிழகம் முழுவதும் ஏற்கெனவே போதைப் பொருட்களின் புழக்கம் தாறுமாறாக அதிகரித்திருக்கிற நிலையில், புகையிலைப் பொருட்களுக்கான தடை நீக்கம் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் புழக்கம் தாறுமாறாக அதிகரித்திருக்கிற நிலையில், புகையிலைப் பொருட்களுக்கான இந்த தடை நீக்கம் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
எனவே, இது தொடர்பாக மத்திய அரசோடு கலந்து ஆலோசித்து தமிழக அரசு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களின் விற்பனையைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், தமிழ்நாட்டிற்குள் இந்த புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்க உரிய சட்டம் கொண்டுவருவது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய முடிவினை எடுத்திடவேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. | அதன் விவரம் > குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடை உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்