குட்கா தடை ரத்து முதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அப்டேட் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.25, 2023

குட்கா தடை ரத்து முதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அப்டேட் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.25, 2023
Updated on
4 min read

குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடை உத்தரவு ரத்து: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள்,உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

எகிப்து அதிபரை வரவேற்ற குடியரசுத் தலைவர், பிரதமர்: நாட்டின் 74-வது குடியரசு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அல் சிசி செவ்வாய்க்கிழமை மாலை டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் எகிப்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் டெல்லி வந்துள்ளது.

நான்கு நாள் பயணமாக டெல்லி வந்த அல் சிசி, புதன்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் கைகுலுக்கி வரவேற்றனர். வியாழக்கிழமை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் அல் சிசி, இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்புகளைப் பார்வையிட உள்ளார்.

இந்தியா - எகிப்து இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து: பிரதமர் நரேந்திர மோடி - எகிப்து அதிபர் அல் சிசி முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே புதன்கிழமை பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

குடியரசு தின சிறப்பு விருந்தினராக புதுடெல்லி வந்துள்ள எகிப்து அதிபர் அல் சிசி, பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான 75 ஆண்டுகால நட்புறவு குறித்தும், அதனை மேலும் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, 75 ஆண்டு கால நட்புறவை நினைவுகூரும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடியும் எகிப்து அதிபர் அல் சிசியும் இணைந்து வெளியிட்டனர். மேலும், இரு தலைவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே இணைய பாதுகாப்பு, கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், ஒளிபரப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதற்கான ஆவணங்கள் இருதரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

ஆளுநரின் தேநீர் விருந்து: காங்கிரஸ், இந்திய கம்யூ. புறக்கணிப்பு: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவினைத் தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்தாண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இந்தத் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரின் தேநீர் விருந்தை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸுக்கு மநீம ஆதரவு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வெற்றிக்கு நானும், எனது கட்சியும் வேண்டிய உதவிகளை செய்வோம். வாக்காளர்கள் அனைவரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.

"மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை கொண்ட கமல்ஹாசன் ஆதரவளிப்பார் என்று எனக்குத் தெரியும். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியும் ஆதரவும்: சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக விருப்ப மனுவை, உங்களிடம் கூறி விட்டு தான் நாங்கள் வாங்குவோம். எங்களுடன் இணக்கமாக இருக்கக்கூடிய கட்சிகள், எங்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்திக்கிறார்கள், நாங்களும் சந்திப்போம்" என தெரிவித்தார்.

இதனிடையே, “அதிமுக ஒன்றுபட்டு களத்திற்கு வரவில்லை என்றாலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை நிராகரித்துவிட்டு தேர்தல் களத்திற்கு சென்றாலும் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினருக்கு கிடைக்காது" என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 29-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமக போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

“திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளை சொல்லி மாளாது”: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க தினத்தை முன்னிட்டு ராயுபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளைச் சொல்லி மாளாது. ஜோக்கர்கள், அடாவடி செய்பவர்கள், பொதுமக்களை அடிப்பவர்கள், உள்ளாட்சி பிரநிதிகளை அசிங்கப்படுத்துவர்கள் ஆகியோர்தான் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர். கல் தூக்கி அடித்த அமைச்சரை இதுவரை பார்த்தது இல்லை. தமிழ்நாடு வெட்கித் தலை குனியும் ஜோக்கர் அரசுதான் தற்போது நடைபெற்று வருகிறது. திமுக கற்காலத்திற்கு சென்று விட்டது" என்றார்.

அதேபோல், கரூர் மாவட்டதில் அதிமுகவின் வீரவணக்க நாள் கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் “திமுகவின் வேலைக்காரர்களாக காவல் துறையினர் செயல்படுன்றனர்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஜன.27-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்த மாதம் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏ.கே. அந்தோணியின் மகன் காங்கிரஸில் இருந்து விலகல்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் எனது ட்வீட்டை திரும்பப் பெறும்படி கூறினர். நான் மறுத்துவிட்டேன். அன்பு பரப்பப்படுவதை ஆதரிப்பவர்களின் முகநூல் பக்கங்கள் வெறுப்பும் துஷ்பிரயோகமுமாக இருக்கிறது. இதற்குப் பெயர் பாசங்கு. வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்த பிபிசி-யின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிராக செவ்வாய்க்கிழமை அனில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், ராஜினாமா முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கனில் பெண் கல்விக்கான தடையை நீக்க வேண்டும்: ஐநா: “கல்வி பயில்வதைத் தடுக்கும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. குறிப்பாக ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி பயில்வதற்கு விதிக்கப்பட்டுள்ள மூர்க்கத்தனமான தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in