Published : 25 Jan 2023 06:57 AM
Last Updated : 25 Jan 2023 06:57 AM
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், மாவட்ட அளவிலான ‘முதல்வர் கோப்பை’க்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், 2022-23-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதல்வர்கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை, ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டு மைதானம், கோடம்பாக்கம் மண்டலம் தி.நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள கண்ணதாசன் மைதானம் ஆகியவற்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, முதல்வர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி, பிப்ரவரிமற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் ரூ.47.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் தமிழகத்தில் பணியாற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களிடம் இருந்து முன்பதிவுகள் வந்துள்ளன. இந்த முன்பதிவானது இம்மாதம் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT