Published : 23 Jan 2023 04:37 AM
Last Updated : 23 Jan 2023 04:37 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர், மநீம வாக்குகள் இடம் மாறுமா?

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், பொதுத்தேர்தலின் போது, மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்த நாம் தமிழர், மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகள் இடைத்தேர்தலில் இடம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை களமிறக்குவதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே, இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால், அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தொகுதி வரலாறு: கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி உருவானது. தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில், அவர் திமுக வேட்பாளராக போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார்.

2021-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா, 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தை அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட்ட எம்.யுவராஜா பிடித்தார். சுயேச்சைகள் உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் மொத்தம் 66.56 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

கட்சிகளின் வாக்கு சதவீதம்: அந்த தேர்தலில், 44.27 சதவீதம் வாக்குகளை திருமகன் ஈவெராவும், 38.41 சதவீதம் வாக்குகளை எம்.யுவராஜாவும் பெற்றனர். 7.65 சதவீதம் வாக்குகளைப் பெற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.கோமதி மூன்றாமிடமும், 6.58 சதவீதம் வாக்குகளைப் பெற்று மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் ராஜகுமார் நான்காமிடமும் பெற்றனர். ஐந்தாவது இடம் நோட்டாவுக்கு கிடைத்த நிலையில், அமமுக வேட்பாளர் முத்துக்குமரனுக்கு 1,204 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

வாக்குப்பதிவு அதிகரிக்குமா?: கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர். பொதுத்தேர்தலைக் காட்டிலும், இடைத்தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், வாக்குப்பதிவு சதவீதம் உயரும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், கடந்த தேர்தலில் மூன்றாமிடம் பிடித்த நாம் தமிழர் கட்சி மீண்டும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, 7.65 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ள இக்கட்சியின் வாக்குசதவீதம் உயருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, மக்கள் நீதி மய்யம் ஏற்கெனவே 6.58 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுமா அல்லது திமுக கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த இரு கட்சிகள் பிரிக்கும் வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வாய்ப்பில்லை என்றாலும், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்குகள், பிரதான எதிர்க்கட்சிக்கு போகாமல் பிரிந்து செல்ல காரணமாக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். வரைவு வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x