

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில், 2021-ம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவும், அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் யுவராஜாவும் போட்டியிட்டனர். இதில், திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த திருமகன் ஈவெரா, கடந்த 4-ம் தேதி காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் படம் மற்றும் பெயர்களை மறைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும், எனத் தெரிவித்தனர்.