

தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை: ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்: தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டு நிகழ்ச்சியில் வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்று பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பாடு என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
நாகாலாந்து, மேகாலயாவுக்கு பிப்.27, திரிபுராவில் பிப்.16.-ல் தேர்தல்: வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இதனை அறிவித்தார்.
அதன்படி மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.27-ல் இடைத்தேர்தல்: தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், மார்ச் 2-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா, கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. இந்நிலையில், மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அத்துடன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவை இடைத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இத்தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
நீட் விலக்கு வழக்குகள்: முதல்வர் தலைமையில் ஆலோசனை: நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை பிப்.15-க்குள் திறக்க முடிவு: ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், "அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் விரைவுப்படுத்தி நடைபெற்று வருகிறது. ஜனவரி இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும். அதன் பிறகு 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். சோதனை செய்து பார்ப்பது மிகவும் அவசியம். பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயற்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். 6 பம்பிங் நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. 99 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன" என்றார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ - திமுக எதிர்ப்பது ஏன்?: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை 2024-ல் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்துள்ள நிலையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தலை மக்களாட்சியின் மகத்துவமாகப் பார்க்காமல், செலவாகப் பார்க்கும் எண்ணமே தவறானது ஆகும். அதனால்தான் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை திமுக கடுமையாக எதிர்க்கிறது என்று திமுக விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், சட்ட ஆணையத்தில் நேரடியாக அளித்தார். அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது என்பது மக்கள் எண்ணத்துக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இத்திட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க்து.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை - இந்திய கம்யூ. எதிர்ப்பு: "ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லி இந்த நாட்டையே அதிபர் ஆட்சி முறைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எல்லாம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், ஓர் ஒப்புக்காக, ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். 2024-ம் ஆண்டு தேர்தல் நடத்த உத்தேசிக்கும் மத்திய அரசு, அந்த ஆட்சி 5 ஆண்டு காலம் நீடித்து நிலைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதற்கு யார் உத்தரவாதம் தர முடியும்?” என்றார்.
மக்களின் வளர்ச்சிக்காக கொள்கைகள்: அமித் ஷா: வாக்கு வங்கியை மனதில் கொண்டு மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்காமல் அவர்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பாளர்களுக்கு தொடரும் தண்டனைகள்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குவது தொடரும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் பிரதமர் இப்ராஹிம் ரெய்சி பேசும்போது, “வன்முறையைல் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட அனைவருக்கு தண்டனைகள் வழங்குவது தொடரும்” என்றார்.
ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். இதனை அம்மாகாண ஆளுநர், தேசிய காவல் துறை தலைவர் ஐகர் க்ளைமென்கோ ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.