

வண்டலூர்: பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேர் வந்துள்ளனர். மாமல்லபுரத்துக்கும், வேடந்தாங்கலுக்கும் ஏராளமானோர் நேற்று வருகை தந்தனர்.
காணும் பொங்கலான நேற்று பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. முன்னெச்சரிக்கையாக நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்கா திறக்கப்பட்டிருந்தது. காட்டுமாடு, காண்டாமிருகம், வெளிமான், கடமான், வராக மான், புள்ளி மான், சதுப்பு நில மான் ஆகிய விலங்குகளுக்கு உணவு அளிப்பதையும், யானை குளிப்பதையும் பார்த்து ரசிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
குடிநீர், உணவு விற்பனை நிலையங்கள், கழிப்பறை, மருத்துவ உதவி மையம், ஓய்வு பகுதிகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை முதலே பார்வையாளர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. நண்பகல், 12 மணிக்கு மேல் கூட்டம் மேலும் அதிகரித்தது. குடும்பத்தினருடன் வந்தவர்கள், யானை, சிங்கம், புலி, காட்டுமாடு, சிறுத்தை மற்றும் பறவைகளை மகிழ்ச்சியாக கண்டு ரசித்தனர். புகைப்படம் எடுத்து கொண்டனர்.
விலங்குகளின் நடமாட்டத்தை, எல்.இ.டி. திரை மூலம் பார்த்து ரசிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க, பெற்றோர் விவரம் அடங்கிய பேட்ஜ்’ கைகளில் ஒட்டப்பட்டது. இதற்கிடையில், பூங்காவில் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் குறித்து, டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அப்போது, அவர் கூறியதாவது: சுற்றுலாத் தலங்களில், போதிய பாதுகாப்பு வசதிகள், காவல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் நெரிசல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு அதிகப்படியான மக்கள் வருவார்கள் என்பதால், தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினா முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்கரையில், உயிர்சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரம்: காணும் பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், குடும்பத்தினரோடு நேற்று மாமல்லபுரத்தில் திரண்டனர்.
இங்குள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், அர்ஜுனன் தபசு, புலிக்குகை, கலங்கரை விளக்கம் ஆகிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர். குடும்பத்தோடு அமர்ந்து ஒருவருக்கொருவர் உணவு பரிமாறி உண்டனர்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக போலீஸார் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். முதலியார் குப்பம் படகு குழாம் பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இதனால், மாவட்ட எஸ்பி.பிரதீப் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கடற்கரை மற்றும் ஈசிஆரில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆங்காங்கே வாகன சோதனைகளும் நடைபெற்றன. கடற்கரையில் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், சிறப்பு வாகனங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சுற்றுலா வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் பூஞ்சேரி மற்றும் தேவனேரி பகுதிகளில் நிறுத்தப்பட்டன. மேலும் பொதுமக்கள் நகருக்குள் சென்று வர மினி பேருந்து, வேன்கள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.
வேடந்தாங்கல்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ஏரிக்கரையில் அமர்ந்து, ஏரியில் உள்ள மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளை நேரில் கண்டு ரசித்தனர்.
சிறுவர், சிறுமியர் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் கோபுரத்தின் மீது ஏறி பறவைகள் மற்றும் கூடுகளில் உள்ள குஞ்சுகளை கண்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் இருந்து வேடந்தாங்கலுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.