

வடபழனியில் ஆண் நண்பருடன் இணைந்து கணவனைக் கொலை செய்த மனைவியையும், ஆண் நண்பரையும் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி பக்தவத் சலம் காலனி 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப் பில் வசித்து வந்தவர் கோபால கிருஷ்ணன்(35). அதே பகுதியில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். இவரது மனைவி பாரதி (28). மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கோபாலகிருஷ்ணன் மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பாரதி வேலை செய்யும் நிறுவனத்தில் வேலூர் காட்பாடியைச் சேர்ந்த கார்த்திக் லியோ(27) என்பவரும் வேலை செய்கிறார். பாரதி, கார்த்திக் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடை வில் தவறான உறவாக மாறியது.
கோபாலகிருஷ்ணன் மது அருந்தி போதையில் தூங்கிய பிறகு, கார்த்திக்கை வீட்டுக்கு வரவழைத்து இருக்கிறார் பாரதி. இப்படி பலமுறை பாரதியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார் கார்த்திக். மேலும் கார்த்திக்குடன் வெளி இடங்களுக்கும் சென்றுள் ளார். இதையறிந்த கோபால கிருஷ்ணன் பாரதியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பாரதி, கணவனைக் கொலை செய்ய கார்த்திக்குடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.
கொள்ளை சம்பவம் நடந்தது போலவும், அதைத் தடுக்க வந்த கோபாலகிருஷ்ணனைக் கொள்ளையன் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது போலவும் இருக்க வேண்டும். இப்படி செய்தால்தான் இருவரும் தப்பிக்க முடியும் என்று பாரதியும், கார்த்திக்கும் திட்டமிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு மது அருந்திய கோபாலகிருஷ்ணன் நன்றாக தூங்கிய பிறகு, திட்டமிட்டபடி கார்த்திக்கை வீட்டுக்கு வரவழைத்தார் பாரதி. கொலை செய்யப்போவதால் தன்னை யாரும் அடையாளம் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக, ‘விக்’ ஒன்றை வாங்கி தலையில் வைத்துக் கொண்டு பாரதியின் வீட்டுக்கு வந்தார் கார்த்திக். பின்னர் அதிகாலை 4 மணி அளவில், தூக்கத்தில் இருந்த கோபாலகிருஷ்ணனின் கழுத்தை அறுத்துள்ளார் கார்த்திக். ரத்தம் வெளியேறிய நிலையில் போதையிலேயே கோபால கிருஷ்ணன் இறந்துவிட்டார்.
திட்டமிட்டபடி கொள்ளை சம்பவம் நடந்தது போல காண்பிக்க, பாரதியின் கை, கால்களை நாற்காலியுடன் சேர்த்து கட்டி முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்தார் கார்த்திக். பின்னர் கொலைக்குப் பயன்படுத்திய ரத்தம் படிந்த கத்தி, வீட்டிலிருந்த நகைகள், செல்போன், ரத்தக்கறை படிந்த சட்டை ஆகியவற்றை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார் கார்த்திக்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த ஏட்டு சங்கர், போலீஸ்காரர் சமுத்திரவேல் ஆகி யோர் கார்த்திக்கை அழைத்து விசாரித்துள்ளனர். கார்த்திக் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரது வீட்டு முகவரியை கேட்டுள்ளனர். அதற்கு கார்த்திக், “நானும் போலீஸ்தான், எனது வீடு இங்கேதான் உள் ளது” என்று கூறியுள்ளார். சந்தேக மடைந்த போலீஸார் அவரது பையை சோதிக்க, அதில் ரத்தக்கறை படிந்த கத்தி, சட்டை இருந்துள்ளது.
மடக்கி பிடித்தனர்
இதுகுறித்து விசாரிக்கும் போதே, கார்த்திக் போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால், போலீஸார் அவரை விடாமல் துரத்தி மடக்கிப் பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க, செல்போனை கொள்ளையடிக்க சென்ற இடத் தில் ஒருவரை கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். உடனடியாக கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாற்காலியில் கட்டப்பட்டு மயக்கமாக இருந்த பாரதியையும் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பாரதியும், கார்த்திக்கும் அனைத்து உண்மை களையும் போலீஸாரிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தந்தை கொலை செய்யப்பட்ட நிலையில், தாயும் சிறைக்கு சென்றதால் ஒரு வயது குழந்தையின் நிலையை பார்த்து அனைவரும் கலங்கி நின்றனர்.