

‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்: ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்து தெருவில் சுற்றித் திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு ரூ.20 கோடியில் ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
‘திருக்குறள் பாரத கலாசாரத்தை வடிவமைத்து வளர்த்தது’: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆளுநர் ரவி, பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை செலுத்தினார். திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது. அதன் ஆழமான போதனைகள், இன்று #G20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு மிகவும் பொருத்தமானவை" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ வழிநின்று சமத்துவச் சமுதாயம் காண உழைப்போம்" என்று கூறியுள்ளார்.
பாலமேடு, சூரியூர் ஜல்லிக்கட்டு: இருவர் உயிரிழப்பு: பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை பாலமேடு, திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திங்கள்கிழமை நடந்தன. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதிமொழியேற்பை நடத்தி வைக்க போட்டிகள் நடைபெற்றன. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் களத்தில் 800 காளைகளும், 355 இளைஞர்கள் முறைப்படி பதிவு செய்திருந்தன. சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகளும், 400 வீரர்கள் குழுக்களாக களம் கண்டனர்.
இந்த நிலையில், பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 காளைகளை அடக்கிய பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் காளை முட்டியதில் காயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது, பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த காளை முட்டியதில், காளமாவூரைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
‘தேநீருக்கு இரட்டைக் குவளை போல இரட்டைக் குடிநீர் தொட்டியும் கூடாது’: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியை இருந்த சுவடே இல்லாத வகையில் இடிக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வேங்கைவயலில் மனிதக் கழிவு கொட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி பேரிழிவின் சின்னம். அது இருந்த சுவடே இல்லாத வகையில் இடிக்கப்பட வேண்டும். ஆதிதிராவிட சமூகத்தினருக்குத் தனிக் குடிநீர்த் தொட்டி அமைப்பது கூடாது. தேநீருக்கு இரட்டைக் குவளை கூடாதெனில்; குடிநீருக்கு இரட்டைத் தொட்டியும் கூடாது!" என்று பதிவிட்டுள்ளார்.
"முதல்வர் மு.க.ஸ்டாலின் , அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று ஆளாளுக்கு தமிழக அரசை கூறு போட்டுக்கொண்டு அரசை நடத்துகின்றனர்"என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய சட்ட அமைச்சர் கடிதம்: நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட்டுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், ''உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட கொலிஜியம் அமைப்பின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில், வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புணர்வையும் ஊக்குவிக்க அரசு விரும்புகிறது. இதற்காக, கொலிஜியம் குழுவில் அரசு பிரதிநிதிகள் சேர்க்கப்படுவதை அரசு பரிந்துரைக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் குறித்து சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், ''தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தபோது, அது ஒரு உத்தரவை பிறப்பித்தது. கொலிஜியத்தின் செயல்முறை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் அது. உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவை பின்பற்றியே, தற்போது தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் இல்லம் நோக்கி முதல்வர் கேஜ்ரிவால் பேரணி: டெல்லியின் பள்ளி ஆசிரியர்கள் பின்லாந்து சென்று பயிற்சி பெறும் மாநில அரசின் முடிவில் ஆளுநர் தலையீடு செய்வதை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆளுநர் இல்லம் நோக்கி திங்கள்கிழமை பேரணியாகச் சென்றனர். பேரணியில் சென்ற எம்எல்ஏக்கள் “துணைநிலை ஆளுநரே பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்காக பின்லாந்து செல்ல அனுமதியுங்கள்” என்ற பதாகைகளை கைகளில் ஏந்திய படியும் கோஷமிட்டும் சென்றனர்.
ஃபத்வாக்கள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன: கேரள ஆளுநர்: இஸ்லாமிய மதகுருமார்கள் விதிக்கும் ஃப்த்வா எனப்படும் மத ஆணைகள், அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியுள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழான பாஞ்சஜன்யா நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆரிஃப் இவ்வாறு கூறியுள்ளார்.
நேபாள விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு: நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள போக்கரா விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 72 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் இந்தியர்கள்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேபாள விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கையை 45 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு அந்நாட்டு பிரதமர் புஷ்பா கமல் தஹல் உத்தரவிட்டுள்ளார்
ஆப்கனில் முன்னாள் பெண் எம்.பி சுட்டுக் கொலை: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள முன்னாள் எம்.பி முர்சால் நபிஜாதாவின் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவரையும், அவரது பாதுகாவலரையும் சுட்டுக் கொன்றது. இந்தத் தாக்குதலில் நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயத்துக்குள்ளானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.