ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் ஆளுநர் மாளிகை புகார்

ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் ஆளுநர் மாளிகை புகார்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவதூறாக பேசியதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் துணைச் செயலர் பிரசன்னா ராமசாமி, காவல் ஆணையர் அலுவலகத்தில் மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் புகார் அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் அநாகரிகமாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். இந்திய தண்டனை சட்டம் 124-வது (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டிஜிபி சைலேந்திர பாபுவிடம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் வழங்கிய புகாரில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் பாஜக பெண் தலைவர்களை, கட்சிக் கூட்டத்தில் தரக்குறைவாகப் பேசியதாக, திமுக உறுப்பினர் சைதை சாதிக்மீது புகார் அளித்தோம். தொடர்ச்சியான அழுத்தத்துக்கு பிறகே, சைதை சாதிக் மீது காவல் துறைவழக்கு பதிவு செய்தது. ஆனால்,கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் காவல் துறை காலம் தாழ்த்தியது.

தமிழக ஆளுநரை திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாகப் பேசியதுடன், தகாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இதை காவல் துறைகண்டுகொள்ளாதது கவலை அளிக்கிறது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் சமீபத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெண் காவலர் மீது திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அவர்கள் மீதுகாவல் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இனி இதுபோல் நிகழாமல் காவல் துறைகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in