Last Updated : 13 Jan, 2023 04:10 AM

 

Published : 13 Jan 2023 04:10 AM
Last Updated : 13 Jan 2023 04:10 AM

சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.16.50 லட்சம் நிதியுதவி: சக உதவி ஆய்வாளர்கள் திரட்டிக் கொடுத்தனர்

கோவை: கோவை உக்கடம் ஆத்துப் பாலத்தைச் சேர்ந்தவர் முகமதுரபீக். கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று, உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

முகமது ரபீக்குக்கு திருமணமாகி மனைவி ஆயிஷா பேகம் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நீலகிரி சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் பணியாற்றிய முகமது ரபீக், கடந்தாண்டு ஜூலை மாதம் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றபோது, லாரி மோதி உயிரிழந்தார். பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்த முகமது ரபீக்கின் குடும்பத்தினருக்கு அவரது மறைவு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

அவர்களுக்கு உதவும் வகையில், 2011-ம் ஆண்டு முகமது ரபீக்குடன் பணியில் சேர்ந்த சக உதவி ஆய்வாளர்கள் தங்களால் இயன்ற தொகையை திரட்டி தர முடிவு செய்தனர்.

இது தொடர்பாக கோவையில் பணியாற்றிவரும் உதவி ஆய்வாளர்கள் சிலர் கூறும்போது,‘‘2011-ம் ஆண்டு 1,200 பேர் நேரடி உதவி ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்தோம். உயிரிழந்தமுகமது ரபீக்கின் குடும்பத்துக்கு பொருளாதார உதவி அளிப்பதற்காக எங்களது பேட்ச் உதவி ஆய்வாளர்களை தொலைபேசி மூலமும், வாட்ஸ் அப் மூலமும் தொடர்பு கொண்டோம்.

யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்ப முள்ளவர்கள் அளிக்கலாம் எனத் தெரிவித்தோம். அதன்படி ஒரு மாதத்தில் ரூ.16.50 லட்சம் தொகை திரட்டப்பட்டது. இந்த தொகையை மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர் மூலம், அவரது அலுவலகத்தில் வைத்து முகமது ரபீக்கின் மனைவியிடம் கடந்த 10-ம் தேதி வழங்கினோம்.

மேலும், அவர்களுக்கு வாடகைக்கு வீடு ஏற்பாடு செய்து கொடுத்தோம். கருணை அடிப்படையில் வேலையை பெற நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x