

‘முதல்வரின் துணிவான நடவடிக்கை’ - பேரவைத் தலைவர்: தமிழக சட்டப்பேரவையில் ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக முழுமையாக படிக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். அது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக புதன்கிழமை கூட்டத்தொடரில் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, "ஆளுநர் உரையின்போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும். ஆளுநர் உரையின்போது அசாதாரண சூழலை உருவாக்கியது அவையோ, அரசோ இல்லை. முதல்வரின் மதிநுட்பத்தால் தான் சட்டமன்றத்தின் மாண்பு காக்கப்பட்டது. இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றங்களின் நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணம். இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் முதல்வர் காத்துள்ளார். தமிழ்நாடே முதல்வரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது” என்று பேசினார்.
“வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை 70 பேரிடம் விசாரணை”: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரையில் 70 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
ஆவின் ஊழியர்களை பணி நீக்கத்துக்கு இடைக்கால தடை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீஸும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு, முந்தைய அதிமுக ஆட்சியில் தேர்வு ஏதும் நடத்தப்படாமல், 10 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு பணி வழங்கியதாக புகார்கள் எழுந்தன. இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“அழிவுப் பாதையில் தமிழ்நாடு” - வெளிநடப்பு செய்த இபிஎஸ்: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் புதன்கிழமை ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சொல்கிறார். பொத்தாம் பொதுவாக கூறாமல் ஆதாரத்துடன் கூற வேண்டும்" என்றார். சட்டம் - ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கஞ்சா பிடிக்கப்படுகிறது என்று வரும் செய்தி சாதாரண செய்தியல்ல, தமிழ்நாடு அழிவுப்பாதைக்கு செல்லும் செய்தி” என்றார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்காமல் இருக்கும் பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்புச் சட்டையணிந்து பேரவைக்கு வந்தனர்.
2014 முதல் முன்னேற்ற பாதையில் செல்லும் இந்தியா - பிரதமர் மோடி: மத்தியப் பிரதேசம் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அம்மாநிலத்தின் இந்தூர் மாநகரில் நடைபெற்று வருகிறது. அம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ''கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இந்தியா, சீர்திருத்தம், மாற்றம், முன்னேற்றம் எனும் பாதையில் பயணித்து வருகிறது. முதலீடுகளைச் செய்வதற்கு இந்தியா மிகச் சிறந்த இடமாக திகழ்கிறது. உலகின் நம்பகமான பொருளாதார அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சியை புகழ்ந்துள்ளன” என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஜோஷிமத் நகர மக்களுக்கு இடைக்கால நிவாரண நிதி: ஜோஷிமத் நகரில் நிலவெடிப்பு காரணமாக கட்டிடங்களில் விரிசல் விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உத்தராகண்ட் அரசு இடைக்கால நிவாரண நிதியினை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் செயலாளர் ஆர். மீனாட்சி சுந்தரம் கூறுகையில்,''நிலவெடிப்பு காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால், பலர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக ரூ.1.5 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும். இதுவரை 723 கட்டிடங்கள் பாதுகாப்பற்ற கட்டிடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், இரண்டு கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற மற்ற கட்டிடங்கள் இடிக்கப்பட மாட்டாது. நல்வாய்ப்பாக, ஜனவரி 7-ம் தேதிக்குப் பிறகு கட்டிடங்களில் புதிய விரிசல்கள் ஏதும் விடவில்லை. பழைய விரிசல்களும் விரிவடையவில்லை'' என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜோஷிமத் அருகில் உள்ள தேசிய அனல் மின் நிலையமான என்.டி.பி.சி-யை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அனல் மின் நிலையம் காரணமாகவே நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் ஜன.20-ல் விசாரணை: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 7-ம் தேதி தொடங்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக இந்த கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில் இதனை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவினை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இதனை ஏற்றுக்க கொண்டு இந்த வழக்கு வரும் ஜனவரி 20-ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. இதனிடையே, அகிலேஷ் குமார் என்ற சமூக ஆர்வலர் ஒருவரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘‘நாட்டு நாட்டு’’பாடலுக்கு கோல்டன் குளோப் விருது: திரைத் துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. Hollywood Foreign Press Association சார்பில் நடக்கும் இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த விருதுக்கு ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா, செல்லோ ஷோ ஆகியப் படங்கள் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பிடித்திருந்தது. ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகி இருந்த நிலையில், தற்போது நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்று அசத்தியுள்ளது.
இதுதொடர்பாக வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ''கோல்டன் குளோப் விருது வென்றிருப்பது மிகவும் சிறப்பான சாதனை. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பிரேம் ரக்ஷித், கால பைரவா, சந்திரபோஸ், ராகுல் சிப்லிகுஞ்ச் ஆகியோருக்கு பாராட்டுக்கள். எஸ்.எஸ்.ராஜமவுலி, ராம் சரண் உள்பட ஆர்ஆர்ஆர் படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க கவுரவம் ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் பெருமைப்படுத்தி உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "கீரவாணி, எஸ்.எஸ்.ராஜமவுலி, ஆர்ஆர்ஆர் திரைபடம் உங்கள் அனைவரது கடின உழைப்புக்கு கிடைத்த தகுதியான வெற்றி. நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
'துணிவு' படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் உயிரிழப்பு: சென்னையில் 'துணிவு' படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் லாரி மீது ஏறி நடனமாடி கீழே குதித்ததில் முதுகு தண்டுவடத்தில் காயமடைந்து உயிரிழந்தார். நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் புதன்கிழமை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. நள்ளிரவு 1 மணிக்கு வெளியான துணிவு பட சிறப்புக் காட்சியை காண ஏராளமான அஜித் ரசிகர்கள் வருகை தந்து, பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இந்தநிலையில், ரசிகர் ஒருவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோகிணி திரையரங்கு அருகே மெதுவாக சென்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது ஏறி நடனம் ஆடியபடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். திடீரென அவர் கீழே குதித்ததில் அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு இந்த துயரசம்பவம் நிகழ்ந்துள்ளது.
“மூன்றாம் உலகப் போர் வராது” -உக்ரைன் அதிபர் நம்பிக்கை: கோல்டன் குளோப் விருது விழாவில், உக்ரைன் அதிபர் வொலொடிமர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், "முதலாம் உலகப் போரில் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோயின. இரண்டாம் உலகப் போரிலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆனால் மூன்றாம் உலகப் போர் நடக்காது. அப்படி நடக்க இது ஒன்றும் மூன்று பாகங்கள் கொண்ட நாடகமல்ல. மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் அடக்குமுறையை நிறுத்த உலக நாடுகள் உதவும் என்று தெரிவித்தார்.