முதல்வர் அறிவுரை முதல் சிறப்புக் காட்சிகள் ரத்து வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.10, 2023

முதல்வர் அறிவுரை முதல் சிறப்புக் காட்சிகள் ரத்து வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.10, 2023
Updated on
3 min read

இரங்கல் தீர்மானத்துடன் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு: தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்கிழமை மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் பல்துறை பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது: ஸ்டாலின்: திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. அப்போது, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் சில அறிவுத்தல்களை வழங்கினார். “சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் ஆளுநரைத் தாக்கி பேசக் கூடாது. பேச வாய்ப்புக் கிடைக்கும் அமைச்சர்கள், யாரையும் புகழ்ந்தோ, இகழந்தோ பேசி பேரவை நேரத்தை வீணாக்காமல் நேரடியாக துறைசார்ந்த திட்டங்கள் வளர்ச்சிளை பற்றி மட்டுமே பேச வேண்டும். இவற்றை திமுக கொறடா கண்கணிக்க வேண்டும். திமுகவினர் ஆளுநருக்கு எதிராக பேனர் வைப்பது, போஸ்டர் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது” என்று அறிவுறுத்தினார்.

குடிமைப்பணி தேர்வர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை: "ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறு இல்லை. ஆனால் அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது" என்று குடிமைப் பணித் தேர்வர்களுடன் உடனான கலந்துரையாடலில் மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘எண்ணித் துணிக’ எனும் தலைப்பில், இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 150 பேருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். அப்போது இதனைத் தெரிவித்தார். மேலும், “மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்தால் நீங்கள் மத்திய அரசின் பக்கம் நிற்க வேண்டும்” என்று குடிமைப்பணி தேர்வர்களுடனான கலந்துரையாடலின்போது அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு இலச்சினை இல்லாத ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழ்: தமிழக ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் கடந்த ஆண்டு தமிழ்நாடு இலச்சினை இருந்த நிலையில், இந்த ஆண்டு இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது குறித்து மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “தமிழ்நாடு அரசு பின்பற்றக்கூடிய இலச்சினை, தமிழ்நாடு என்ற பெயரை ஆளுநர் புறக்கணிக்கிறார், திராவிட அரசியலை விமர்சிக்கிறார் என்றால், அவர் ஆளுநராக இங்கிருப்பதற்கு தகுதியற்றவராகிறார்" என்று அவர் கூறினார்.

திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.3000 கருணைக் கொடை: திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து, 38 சதவீதமாக உயர்த்தி வழங்கவும், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் கருணைக்கொடையாக ரூபாய் 3,000 வழங்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜோஷிமத் நகரில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிப்பு: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித நகரமான ஜோஷிமத் தொடர் நிலவெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 600 கட்டிடங்களில் விரிசல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் மலாரி இன், மவுண்ட் வியூ ஆகிய ஹோட்டல்கள் உட்பட அதிகம் பாதிக்கப்பட்ட வீடுகளை இடிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கட்டிடங்களை இடிக்கும் பணி ரூர்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்களின் மேற்பார்வையில் நடைபெறும். அப்போது மாவட்ட நிர்வாகத்திற்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அங்கு நிலைநிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

ஜோஷிமத் நகரில் ஏற்பட்ட நிலவெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கஷ்டப்பட்டு கட்டிய தங்கள் வீட்டை எண்ணி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

அவசர பிரச்சினைகள்: உச்ச நீதிமன்றம் முக்கியக் கருத்து: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு வெடிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவினை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நாட்டிலுள்ள ஒவ்வொரு முக்கியமான பிரச்சினைக்கும் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் என்பது இல்லை. அந்தப் பிரச்சினைகளைக் கையாள ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு அதற்கு அவர்கள் தீர்வு காண்பார்கள் என்றார். மேலும் மனுவினை ஜனவரி 16-ம் தேதி விசாரணை செய்யலாம்” என்று தெரிவித்தார்.

ராகுலின் யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும்: பாஜக: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை புதன்கிழமை பஞ்சாபில் இருந்து தொடங்க உள்ளது. அந்த யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரத்திற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. சீக்கிய எதிர்ப்புதான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம். ஆபரேஷன் ப்ளூஸ்டார் எனும் ராணுவ நடவடிக்கை மூலம் சீக்கியர்களின் தங்க கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கைகளை பஞ்சாப் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

சீக்கிய ஒற்றுமைக்கு இதுவரை காங்கிரஸ் எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ராகுல் காந்தி தற்போது மேற்கொண்டு வரும் யாத்திரைக்கு பொது நோக்கம் என்று எதுவுமில்லை. தான் பிசியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த யாத்திரையை சீக்கியர்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தான் டி சர்ட் மட்டுமே அணிவது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்த ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசத்தில் நான் சில தினங்களுக்கு முன்னர் 3 ஏழைச் சிறுமிகளைப் பார்த்தேன். நான் அவர்களை என்னுடன் அரவணைத்தபோது அவர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அன்று நான் ஒரு முடிவு எடுத்தேன். என்னால் தாங்க முடியாமல் நடுங்கவைக்கும் குளிர் என்னை வாட்டும்வரை டி ஷர்ட் மட்டுமே அணிவது என்று முடிவு செய்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘வாரிசு’, ‘துணிவு’ - அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தடை: ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்கு ஜனவரி 13 முதல் 16 வரை அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான செய்திக் குறிப்பில், "ஜனவரி 13, 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களை அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு சிறப்புக் காட்சிகளாக வெளியிட தடை விதிக்கப்படுகிறது. தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். திரையரங்கு நுழைவு வாயில்களில் ரசிகர்கள் தங்கள் நாயகர்களுக்கு பேனர் கட் அவுட் வைத்து, அதற்கு பாலாபிஷேகம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை மாணவிகள் கல்வி கற்க அனுமதி: ஆப்கானிஸ்தானில் 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை மாணவிகள் கல்வி கற்க தலிபான் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பை தலிபான்களின் கல்வித் துறை அமைச்சகம், கடிதம் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in