ஆளுநரை எதிர்ப்பது தமிழக முதல்வரின் திசை திருப்பும் நாடகம்: புதுச்சேரி அதிமுக

ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: “எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநருக்கு வென்சாமரம் வீசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளும் கட்சியாக வந்தவுடன் ஆளுநரை எதிர்ப்பது ஏன்?” என புதுச்சேரி அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "ஆளுநரால் வாசிக்கப்பட்ட தமிழக அரசின் உரையை நீக்கம் செய்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல் சட்டப்பேரவை மரபுக்கும், நடத்தை விதிகளுக்கும் எதிரான ஒன்றாகும். ஆளுநர் என்பவர் ஆளும் மாநில அரசுக்கு அடிமை இல்லை.

சுதந்திரம், உண்மைத் தன்மை, சமத்துவம், பிரிவினையற்ற செயல் உள்ளடக்கியது இந்திய அரசியலமைப்பாகும். அதன்படி தனக்கு உள்ள சுதந்திரத்தின் அடிப்படையில் தமிழக ஆளுநர் தனக்கு ஏற்புடையதாக இல்லாத ஒரு சில வார்த்தைகளை தவிர்த்துள்ளார். ஆளுநர் உரை முடிந்த பிறகு அதன் தமிழாக்கம் சட்டப்பேரவை தலைவரால் வாசிக்கப்பட்ட பிறகு அத்துடன் சபை நடவடிக்கை முடிவுக்கு வரும். ஆனால், சட்டப்பேரவை தலைவரின் தமிழ் வாசிப்புக்கு பிறகு தமிழக முதல்வர் ஆளுநருக்கு எதிரான கண்டன தீர்மானத்தை எந்த விதியின் கீழ் கொண்டுவந்தார். இது தமிழக முதல்வர் ஸ்டாலினின் சட்டப்பேரவை நிகழ்வில் உள்ள முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

ஆளுநரை சட்டப்பேரவையில் அவமதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மக்கள் விரோத திமுகவின் நடவடிக்கை இருந்தது. முன்கூட்டியே தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆளுநரை அவமதிக்க வேண்டும் என தமிழக முதல்வரால் கொடுக்கப்பட்ட ஆணையினை திமுகவின் கூட்டணி கட்சிகள் சிறப்பாக அரங்கேற்றினர். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளும் அதிமுகவை ஒடுக்க, நசுக்க, குற்றம் சுமத்த மாதந்தோறும் ஆளுநரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து, வென்சாமரம் வீசிய திமுக தலைவர் ஸ்டாலின் ஆளும் கட்சியாக திமுக வந்தவுடன் ஆளுநரை எதிர்ப்பது ஏன்?

அப்போது அதிமுக ஆட்சியில் கிழியாத சட்டையை தானே கிழித்துக்கொண்டு ஆளுநரை தேடி ஓடிய திமுக தலைவர் ஸ்டாலின், இன்று ஆளுநரை எதிர்ப்பது தனது அரசின் ஊழல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, அரசின் செயலற்ற தன்மையை மக்களிடம் இருந்து திசை திருப்பும் நாடகமாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்" என்று அன்பழகன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in