Published : 10 Jan 2023 04:20 AM
Last Updated : 10 Jan 2023 04:20 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு எப்போது தொடங்கும் என காளை உரிமையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகையன்று அவனியா புரத்திலும், ஜனவரி 16-ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 17-ம்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை பரா மரிப்புத் துறை சார்பில் தகுதிச்சான்று வழங்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
தகுதிச்சான்று பெற்ற காளைகளுக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான ‘டோக்கன்’ மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும். அதற்கு தகுதிச் சான்று பெற்ற காளைகளை, மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த ஆன்லைன் முன்பதிவு தற்போது வரை தொடங்கப்படவில்லை.
ஒரு காளை ஒரு போட்டியில்தான் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அந்த அடிப்படையில் அவனியாபுரத்தில் பங்கேற்கும் காளை, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாது. 3 போட்டிகளுக்கும் தனித்தனியாக ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காளை உரிமையாளர்கள் இதற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மைய மதுரை மாவட்ட தலைவரும், அலங்காநல்லூரை சேர்ந்த பூசாரி லோகு கூறியதாவது: 18 ஆண்டுகளாக காளைகளை ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடுகிறேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கோயில் காளையை நான்தான் அவிழ்த்து வருகிறேன்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை விரைவாக பதிவு செய்தால், அதில் நிராகரிக்கப்படும் காளைகள் அடுத்த போட்டிக்கு விண்ணப்பிக்கவும், நிராகரிப்புக்கான காரணங்களை அறிந்து மீண்டும் விண்ணப்பிக்கவும் நேரம் கிடைக்கும். போட்டிக்கு 2 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க அனுமதித்தால் காளைகளை பதிவு செய்து டோக்கன் பெறுவதில் குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளது என்றார்.
மாவட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடந்த ஆண்டுகளில் போட்டி தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் ஆன்லைன் முன்பதிவு தொடங்கி டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டும்,அதே முறைதான் கடைப்பிடிக்கப்படும். இதில் ஆட்சியர்தான் முடிவெடுப்பார் என்றார்.
ஒரு ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை, மற்றொரு ஜல்லிக்கட்டில் பங்கேற்கக் கூடாது என்று கட்டுப்பாடு உள்ள நிலையில் ஒரே காளைக்கு அலங்காநல்லூர், பாலமேட்டில் காளை உரிமையாளரை மட்டும் ஆள் மாறாட்டம் செய்து அவர்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி கால்நடை துறையினரை ஏமாற்றி தகுதிச்சான்று பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கால்நடைத் துறையினரால் இந்த ஆள்மாறாட்டத்தை கண்டுபிடிக்க முடியாது. அதனால், ஒரே காளை ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் டோக்கன் வழங்கும்போது இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று காளை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT