

சென்னை: தமிழக ஆளுநருக்கும், தமிழுக்கும் என்ன சம்பந்தம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தேமுதிக சார்பில், நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமான மூலம் வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த் இன்று (ஜன.8) மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தமிழ்நாடு என்ற பெயர் தேவை இல்லை. தமிழகம் மட்டுமே போதும் என ஆளுநர் ரவி கருத்து கூறியிருக் கிறார். அவர் 5 ஆண்டுகள் பணியில் இருந்துவிட்டு சென்றுவிடுவார். அவருக்கும், தமிழுக்கும், என்ன சம்பந்தம். அவருக்கு என்ன தெரியும். அவரது கருத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பில், தேமுதிகவின் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.
தமிழக அரசின் புதிய மக்கள் அடையாள அட்டை என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மக்களுக்கு தர வேண்டிய அனைத்து சலுகைகளும் தரப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு வேலை பார்கிறார்கள். இது குறித்து அரசு கணக்கெடுக்க வேண்டும். தமிழகம் போன்று ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஐடி உருவாக்கி னால் நாட்டில் பெரிய குழப்பம் ஏற்படும். இத்திட்டத்தை அமல்படுத்தும் முன், மக்களிடம் கருத்துக் கேட்கவேண்டும். வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை கட்சிப் பணியை செய்து கொண்டிருக்கிறோம். உட்கட்சி பணி நடைபெறுகிறது. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு பின், கட்சியின் வளர்ச்சியை நாங்கள் எதிர்கொண்டு இருக்கிறோம். தேர்தல் வரும் நேரத்தில் உரிய அறிவிப்பை தலைவர் வெளிப்படுத்துவார்.
ஏற்கனவே செவிலியர்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளித்திருக்கிறோம். கரோனா எனும் கொடிய நோய் உலகை ஆடிப்படைத்தபோது, தங்களது உயிரை பணயம் வைத்து கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றியவர்கள் செவிலியர்கள். கரோனா மீண்டும் பரவும் சூழலில் அவர்களை பணி நீக்கம் செய்தது தவறு. தேவை ஏற்படும்போதும், மீண்டும் தற்காலிகமாக பணியில் அமர்த்தும்போது அவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக மாறியிருக்கும். அவர்களை பணி நீக்கம் செய்த தை வன்மையாக கண்டிக்கிறோம் .
அவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும். கருவேப்பிலை மாதிரி தேவையின்போது, உபயோகித்துவிட்டு பிறகு தூக்கி எறிவது கண்டிக்கத்தக்கது. செவிலியர்களுக்கு ஊதிய உயர்வுடன் பணி வழங்கவேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் கார் மூலம் திருமங்கலத்திலுள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு ராஜபாளையம் சென்றார். முன்னதாக அவரை தேதிமுக அவைத் தலைவர் இளங்கோவன், துணைச் செயலாளர் பார்த்தசாரதி, உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன், விசாரணைக் குழு உறுப்பினர் அழகர்சாமி, மாவட்ட செயலாளர்கள் கணபதி, பாலச்சந்திரன், முத்து பட்டி மணிகண்டன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.