

கோவை: மதங்களுக்கு எதிரி இல்லை என்று கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வாரா என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த 5-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நாங்கள் மதவாதத்துக்குதான் எதிரிகளே தவிர, மதத்துக்கு எதிரிகள் அல்ல. மதம் - ஜாதி வேற்றுமை மட்டுமல்ல, கோயில் - சாமி வேற்றுமையும் திராவிட மாடல் அரசுக்கு இல்லை" என்று பேசியிருக்கிறார்.
மதங்களுக்கு எதிரி இல்லை என்றால், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்ல மறுப்பது ஏன் என்பதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வது மட்டுமல்ல, அவர்களின் மத நிகழ்வுகளிலும் முதல்வர் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொள்கின்றனர்.
கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நானும் கிறிஸ்தவன்தான். நான் காதலித்து மணந்த மனைவியும் கிறிஸ்தவர்தான்" என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். உண்மை பேசிய அவருக்கு பாராட்டுகள். அதுபோல திமுகவில் இருக்கும் மற்ற தலைவர்களும், அமைச்சர்களும் நாங்கள் இந்துக்கள் என்று சொல்ல, திமுக தலைமை அனுமதிக்குமா?. திமுக என்பது இந்து விரோத கட்சி என்பதை, அக்கட்சி ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறது.
நாங்கள் மதங்களுக்கு எதிரி இல்லை என்பது முதல்வரின் உள்ளத்திலிருந்து வந்திருந்தால், இனி இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். மற்ற மதங்களின் கோயில்கள், மடங்களில் தலையிடாத மதச் சார்பற்ற அரசு, இந்து மத கோயில்கள், மடங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் மதங்களை மதிப்பது. அதுதான் உண்மையான மதச்சார்பின்மை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.