

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளை பரிசோதனை செய்து, போட்டியில் அனுமதிப்பதற்கான தகுதிச் சான்றுகள் வழங்கும் பணி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.
தைப்பொங்கல் முதல் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டும். தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜன. 15-ம் தேதி நடக்கிறது. மறுநாள் 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியும், 17-ம் தேதி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடக்கிறது.
இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே தொடங்கி விட்டது. வருவாய்த் துறையினர், கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகளை அழைத்து ஆட்சியர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மற்றொரு புறம், தற்காலிக வாடிவாசல் அமைத்து மாடுபிடி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல், நடைப்பயிற்சி அளித்து சத்தான உணவுகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்து, அதற்கான தகுதிச் சான்றுகளை கால்நடை பராமரிப்பு துறையினர், நேற்று முதல் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜல்லிக்கட்டில் திடகாத்திரமான காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சிறிய காளை கன்றுகளை அனுமதிக்க முடியாது. அதனால், இந்தப் பரிசோதனையில் காளைகளுக்கு காயம், நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்கிறோம். காளையின் வயது, உயரம், கொம்புகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதிச் சான்று வழங்குகிறோம்.
அதன்பின் இந்த காளைகள் புகைப்படம், உரிமையாளர் ஆதார் கார்டு போன்றவற்றை பதிவு செய்து ஆன்லைனில் பதிவு செய்கிறோம். அதன்பிறகே இந்த காளைகள் எந்த ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறதோ, அதற்கான டோக்கன்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.