Published : 03 Jan 2023 03:45 PM
Last Updated : 03 Jan 2023 03:45 PM

“அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” - பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம் | கோப்புப்படம்

சென்னை: “இந்த ஒன்றரை ஆண்டுகளில்தான் இந்த ஆடியோ, வீடியோ சர்ச்சை நடக்கிறது. அதுவும் கடந்த இரண்டு மாதங்களில் 3 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பாஜகவில் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சென்னையில் இன்று (ஜன.3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "எனது பதவி நீக்கம் தொடர்பாக, விசாரணை நடத்த கட்சித் தலைமையிடம் கோரியிருந்தேன். அதேபோல், எனது தரப்பு விளக்கங்களை மின்னஞ்சலாகவும் அனுப்பியிருந்தேன். அதுமட்டுமின்றி, தொடர்ச்சியாக வார் ரூமில் என்னைக் குறிவைத்து தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டேயிருந்தது.

அதாவது, துபை ஹோட்டலில் என்ன செய்தீர்கள்? நீங்க என்ன வீடியோ வைத்திருக்கிறீர்கள்? என்றெல்லாம் தொடர்ச்சியாக தகவல் அனுப்புகின்றனர். கட்சியில் இருக்கும்போதே இவ்வாறு பாதிக்கப்படுகிறோம். மாநிலத் தலைவராக இருந்தும் அண்ணாமலை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கட்சிக்கார்களிடம் இதுபோல செய்யக்கூடாது என்றுகூட அவர் சொல்லவே இல்லை.

நானும் கடந்த இரண்டு மாதமாக விசாரணைக்காக காத்திருந்தேன். உங்கள் அனைவருக்கும் தெரியும், பாஜகவில் ஹனிட்ராப் எனும் புதிய விஷயம் வந்துள்ளது. ஹனிட்ராப் என்பது ஒரு பெண்ணாக ஆபத்தான ஒரு விஷயம். துபாய் ஹோட்டலில் நான் செய்தேன் என்றும், அதை சொன்னால் அசிங்கமாகிவிடும் என்றும் 150 பேருக்கும் முன்னால் பேசப்பட்டிருக்கிறது. இதனால் என்னைப் பற்றி நிறைய பேருக்கு தவறான எண்ணங்கள் தோன்றிவிட்டது. இதனால் பலர் எனக்கு போன் செய்து என்ன நடந்தது என்று கேட்டனர். நானும் இதுகுறித்து விசாரித்தபோது, என் பெயரை குறிப்பிட்டே அவ்வாறு பேசியிருப்பது உறுதியானது.

உடனே நானும் கட்சித் தலைவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினேன். இந்த நிலையில், என்னைப் பற்றிய வீடியோ இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இதனால் நான் உடைந்து போனேன். இச்சம்பவம் குறித்து இதுவரை தலைவர் வாய்த்திறக்கவே இல்லை. ஆனால், தனியார் மூலம் ஒரு 5, 6 வார் ரூம்கள் இருக்கிறது. அங்கிருந்து தொடர்ச்சியாக இதுகுறித்து பேசப்படுகிறது. நானும் இதற்கு எதிராக எவ்வளவு தூரம்தான் குரல் எழுப்புவது.

அலீசா அப்துல்லா, திருச்சி சூர்யா டெய்சி சரணுக்கு கட்சி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. ஆனால், நான் தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறேன். தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, எனக்கு மட்டும் ஏன் விசாரணை நடத்தவில்லை. கட்சியிலிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லாமல் போய்விட்டது. கட்சி விதிகளின்படி விசாரணை நடத்தாமல், ஒருவரை தற்காலிக பதவி நீக்கம் செய்யக்கூடாது. ஆனால், அதெல்லாம் மீறி நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

நான் திரும்ப திரும்ப விசாரணை கோரியும் அதுகுறித்து இதுவரை எந்த தகவலும் கூறவில்லை. நான் மெசேஜ் அனுப்பினால் கூட தலைவர் பதில் அளிப்பது இல்லை. இந்த ஒன்றரை ஆண்டுகளில்தான் இந்த ஆடியோ, வீடியோ சர்ச்சை நடக்கிறது. அதுவும் கடந்த இரண்டு மாதங்களில் 3 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பஜகவில் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாஜகவில் இருந்து தான் விலகுவதாக காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும், விசாரணைக்கு வாய்ப்பு கொடுக்காத, பெண்களுக்கு சம உரிமையும் மரியாதையும் கொடுக்காத காரணங்களுக்காக தமிழக பாஜகவில் இருந்து விலகுகிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x