

சென்னை: மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை 4.60 கி.மீட்டருக்கு ரோப்வே அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு ஆய்வை தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தியாவில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதன்படி நகர்புறங்களில் ரோப்வே அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2022-23 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேசிய ரோப்வே வளர்ச்சித் திட்டம் பர்வதமாலா பொதுத் துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2022-23-ல் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 ரோப்வே திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்தியாவில் உள்ள மலைப் பிரதேசங்கள், சுற்றுலாப் பகுதிகள், போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்புறங்களில் இந்த ரோப்வே திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தராகண்ட, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கான டெண்டரை தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சாத்தியக் கூறு அறிக்கையில், சுற்றுலா வசதிகள், பயணிகளின் எண்ணிக்கை, அடுத்த 30 ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரிக்கும், ரோப்வே கட்டணம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படவுள்ளன.