

சென்னை: சென்னை மாநகராட்சியின் 16 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 8 முதல் மாலை 4 மணி வரை முழு நேர பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் 16 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ஒரு பல் மருத்துவர், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையங்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 8 முதல் மாலை 4 மணி வரை முழு நேர பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறிப்பாக, பொதுமக்களுக்கு பற்களில் சொத்தை, ஈறுகளில் தொற்று, பற்களில் சீழ், நோய்த் தாக்கம், பற்சிதைவு, அளவிடுதல் உள்ளிட்ட பல்வேறு பல் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
திருவொற்றியூர், மணலி, லட்சுமிபுரம், சத்தியமூர்த்தி நகர், கொண்டித் தோப்பு, செம்பியம், ஒரகடம், அயனாவரம், மீர்சாகிப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, வளசரவாக்கம் காமராஜர் சாலை, முகலிவாக்கம், திருவான்மியூர், பாலவாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆகிய 16 இடங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘பல் மருத்துவ சேவைக்கு தனியாரிடம் சென்றால் குறைந்தது ரூ.500 செலவாகும். ஏழைகளின் மருத்துவ செலவினங்களை குறைக்கும் வகையில், ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயங்கும் 16 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நடமாடும் பல் மருத்துவமனை: இது மட்டுமின்றி, நடமாடும் பல் மருத்துவ சேவை வழங்கும் வாகனமும் இயக்கப்படுகிறது. இவை மாநகராட்சி பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளது. எனவே, பொதுமக்கள் பற்கள் தொடர்புடைய பாதிப்புகளுக்கு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றனர்.