Published : 25 Dec 2022 09:18 AM
Last Updated : 25 Dec 2022 09:18 AM
தாம்பரம்: சொத்து வரியுடன் ரேஷன் கார்டு, பான் கார்டு மற்றும் ஜிஎஸ்டி எண்ணை இணைக்க தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், எதற்காக இணைக்க வேண்டும் என்பது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.
தாம்பரம் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.17 லட்சம் ஆகும். வரி உயர்வு அரசாணையின்படி, இவர்களிடம் இருந்து சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சொத்து வரியுடன் ரேஷன் கார்டு, பான் கார்டு மற்றும் ஜி.எஸ்.டி. எண்ணையும் இணைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாகச் சென்று சொத்து வரி எண்ணுடன் ரேஷன் கார்டு, பான் கார்டு, ஜி.எஸ்.டி. எண்ணை பெற்று இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சியின் இச்செயலுக்கு, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, குரோம்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் வி.சந்தானம் கூறியதாவது: சொத்து வரியுடன் ரேஷன் கார்டு எண்ணை இணைப்பது ஏன் என்ற காரணத்தை அரசு விளக்கவில்லை. வணிக பயன்பாடு நிறுவனங்கள், பான் கார்டு, ஜி.எஸ்.டி. எண்களையும் இணைக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இது குறித்த எவ்வித அறிவிப்பும் நாளிதழ்களில் வரவில்லை. டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு வீடாக வந்து, ரேஷன் கார்டை வாங்கி அதிலுள்ள எண்ணை பதிவு செய்கின்றனர். இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.ரேஷன் கார்டு எண், பான் கார்டு விவரங்களை கேட்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சரியான காரணத்தைக் கூறாமல் எதற்கு கேட்கிறார்கள் என்பதை அரசு விளக்க வேண்டும். இல்லையெனில், மக்களிடம் தொடர்ந்து எதிர்ப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தமிழக அரசு அறிவுத்தலின்பேரில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏன், எதற்காக என்பது குறித்து எங்களுக்கும் விளக்கவில்லை. இதனால் பல இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. உயர் அதிகாரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT