

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்துவதை, ஓட்டு வங்கி அரசியலுக்காக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் எதிர்ப்பதாக அம்மாநில பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரி மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக தனியார் பள்ளிகளில் படிக்க முடியாமல் அரசுப் பள்ளிகளை நம்பி பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நீண்ட முயற்சிக்கு பிறகு வரும் கல்வியாண்டில் அமல்படுத்த உள்ளது.
ஏற்கனவே அரசுப் பள்ளி குழந்தைகள் 5ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையே பயின்று வருகின்றனர். இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் எதிர்த்து வருகின்றனர். திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்களின் வீட்டு பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படிக்கலாம். ஆனால் அவர்கள் தனியார் பள்ளிக்கு இணையான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை எதிர்ப்பது என்பதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டம் தமிழ் மொழிக்கு எதிரானது அல்ல. புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிககள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறிவிட்டனர். இந்தப் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக இருக்கிறது. இதேபோன்று அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வந்தாலும் தமிழ் மொழி கட்டாயம் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளை திமுக நடத்துகிறது என்பது தெரிந்தும், புதுச்சேரியில் மட்டும் சிபிஎஸ்இ-யை எதிர்கட்சித் தலைவர் சிவா எதிர்த்து வருவதன் நோக்கம் என்ன?
மாணவர்கள் எந்தப் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்பதை மாணவர்களும், அவர்களின் பெற்றோர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டுமே தவிர நாராயணசாமியும், சிவாவும் அல்ல. ஓட்டு வங்கி அரசியலுக்காக ஒட்டுமொத்த மாணவர்களின் நலனை கேள்விக்குறியாக்குவதை பாஜக கண்டிக்கிறது. எனவே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு எதிராக இருக்கும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் நாராயணசாமி மற்றும் சிவாவை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும்" என்று சாமிநாதான் கூறியுள்ளார்.